பாகுபலிக்கு ஆறு, தனிஒருவனுக்கு மூன்று, குவியும் விருதுகள்

2000வது வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் பாலிவுட் கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி வழங்கப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் (IIFA ), இந்த வருடம் முதல் முறையாக தென்னிந்திய திரைப்படக் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. IIFA உத்சவம் என பெயரிடப்பட்டுள்ள இவ்விருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி வழங்கப்படுகிறது.

சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 12 விருதுகள் வழங்கும் விழா ஜனவரி 24 முதல் 25 வரை, ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், 12 விருதுகளில் 6 விருதுகளை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட பாகுபலி தட்டிச் சென்றது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகருக்கான விருது சத்யராஜுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது ரம்யாகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டது, மேலும் சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் பாடகிக்கான விருதினை பாகுபலி படத்தில் பாடிய ஹரிசரண் சேஷாத்ரி மற்றும் கீதா மாதுரி பெற்றனர்.

சிறந்த நடிகருக்கான விருதினை சென்ற வருடம் மாபெரும் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்திற்காக ஜெயம் ரவியும், அதே படத்திற்காக அரவிந்த் சாமி சிறந்த வில்லனுக்கான விருதையும் வென்றனர். மாயா படத்தில் தனது திறமையான நடிப்பினை வெளிபடுத்தியிருந்த நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றார். கோவை சரளா, காஞ்சனா 2 படத்திற்காக சிறந்த நகைச்சுவையாளர் விருதினை வென்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கத்தி படத்திற்காக அனிருத்துக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது மாரி படத்திற்காக தனுஷுக்கும் வழங்கப்பட்டது.

மலையாளத்தில் சென்ற வருடம் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் மற்றும் ப்ருத்விராஜ் நடிப்பில் வெளியான என்னுநுண்டே  மொய்தீன் படங்கள் அதிக விருதுகளை வென்றன. சிறந்த படம், நடிகர், நடிகை, துணை நடிகை, சிறந்த பின்னணி பாடகி, போன்ற ஐந்து விருதுகளை என்னுநுண்டே மொய்தீன் படமும் , சிறந்த இசை, பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், நகைச்சுவையாளர் விருதுகளை பிரேமம் தட்டி சென்றது. மலையாளத்தில் சிறந்த இயக்குநருக்கான விருதை நீனா படத்திற்காக லால் ஜோஸ் பெற்றார்.

விழாவில், மறைந்த இயக்குநர்  கே. பாலச்சந்தர்,  எம்.எஸ்.வி,  தயாரிப்பாளர் T.E வாசுதேவன் போன்றோருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகினருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!