10 இலட்சம் கொடுத்து அரண்மனை2 சிக்கலைத் தீர்த்த சுந்தர்.சி

திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், ‘நடிகர் ரஜினிகாந்த், லதா, விஜயகுமார் உள்பட பலர் நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படத்தை 1978-ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டேன். இந்தப் படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி அரண்மனை என்ற பெயரில் இயக்குனர் சுந்தர்.சி எடுத்துள்ளார்.

இந்தப் படத்துக்குத் தடை கேட்டு வழக்குத் தொடர்ந்தேன். இதையடுத்து இரு திரைப்படங்களையும் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய இந்த கோர்ட்டு வக்கீல் கமிஷனர் ஒருவரை நியமித்தது. அவரும் படங்களைப் பார்த்து, இரு திரைப்படங்களும் ஒரேவிதமான கதைதான் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், அரண்மனை-2 என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி எடுத்துள்ளார்.

இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேனியல் அரிபாபு, இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுக முடிவுக்கு வரும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி, ‘மனுதாரர் முத்துராமன், எதிர்மனுதாரர் சுந்தர்.சி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுக முடிவுக்கு வந்து விட்டனர்.

படத்தின் கதை உரிமைக்காக ரூ.10 லட்சம் கேட்பு காசோலையாக வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறி, இருதரப்பினரும் செய்துகொண்ட ஒப்பந்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அவற்றைப் படித்துப் பார்த்த நீதிபதி டேனியல் அரிபாபு, மனுதாரர் முத்துராமன், எதிர்மனுதாரர் சுந்தர்.சி ஆகியோர் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி சமரச பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார். அரண்மனை இரண்டாம்பாகமும் வெளியாகிவிட்ட நிலையில் பத்துஇலட்சம் கொடுத்து இரண்டு படங்களுக்கான சிக்கலையும் சரி செய்துகொண்டார் சுந்தர்.சி என்று சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!