கமலை நெகிழ வைத்த கவிஞர்

கடந்த ஜனவரி 26 குடியரசு தினம் முதல் ட்விட்டரில் தன் கணக்கைத் தொடங்கி எழுதிவருகிறார் கமல். ஆங்கிலத்தில் மட்டுமல்லாது அவ்வப்போது தமிழிலும் எழுதி வரும் அவர், இன்று காலை ஒரு ட்வீட்டில் ”சில கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலம் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டியது அவசியம். இன்று காலை கவிஞர் மகுடேசுவரனின் கவிதை ஒன்றை சுகா பகிர்ந்திருந்தார். படித்து நெகிழ்ந்துவிட்டேன்’ என்று ட்விட்டியிருந்தார்.

இதோ, கமல் பாராட்டிய அந்தக் கவிதை:-

‘உங்கள் திருமணத்தன்று
நான் எங்கிருந்தேன் ?’
மகளின் கேள்விக்கு
விடைகூற முயன்றேன்.
“அந்தத் தீயின்
நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்.
எம் தலைமீது தூவப்பட்ட
அட்சதையில்
ஒரு மணியாக இருந்தாய்.
சூடிய மாலை நறுமணத்தில்
இருந்ததும் நீதான்.
தாத்தா பாட்டியரின்
கண்களில்
நீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.
உன் தாயைக் கரம்பற்றிய
என் உள்ளங்கைக்குள்
வெப்பமாக இருந்ததும்
நீயே...!”

பெயரிடப்படாத இரண்டு படங்களில் வசனம் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் மகுடேசுவரன், ஏற்கனவே நஞ்சுபுரம் என்கிற படத்தில் வசனம் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும்.. அதில் பாடல்கள் மட்டுமின்றி வசனங்களிலும் ஆங்கிலக்கலப்பில்லை என்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!