தனிஒருவன் வெற்றியைத் தக்கவைக்குமா மிருதன்?

கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில் ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் வெளியானது. அவருடைய முந்தைய எல்லாப்படங்களையும் விடக் கூடுதலான வரவேற்பு மற்றும் வசூலைப் பெற்று, அப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுத்தந்தது அந்தப்படம். அந்தப்படத்தின் வெற்றி காரணமாகவே சில ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த பூலோகம் படம் வெளியானது.

அந்தப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று ஜெயம்ரவிக்குப் பலம் சேர்த்தது. அதைத் தொடர்ந்து இந்தவாரம் ஜெயம்ரவி நடித்திருக்கும் மிருதன் படம் வெளியாகவிருக்கிறது. தனிஒருவன் படத்துக்குப் பிறகு அவர் நடித்தபடம் இது. தமிழ்த்திரையுலகில் இதுவரை வராத புத்தம்புதிய கதைக்களத்துடன் இந்தப்படம் தயாராகியிருக்கிறது. ஸோம்பிக்கள் பற்றிய படங்கள் ஹாலிவுட்டில் நிறைய உண்டு. தமிழில் இதுதான் முதல்படம்.

மனிதன் பாதி மிருகம் பாதி கொண்ட மனிதர்கள்தாம் ஸோம்பிக்கள் என்று சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வகை வைரஸ் தாக்குதல் காரணமாக இப்படி மாறுகிறார்கள் என்பது அறிவியல்காரணம். அதனால்தான் இந்தப்படத்துக்கு மிருகம் என்கிற சொல்லிலிருந்து முதலிரண்டு எழுத்துகளையும் மனிதன் என்கிற சொல்லிலிருந்து கடைசி இரண்டு எழுத்துகளையும் எடுத்து மிருதன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தை நாய்கள்ஜாக்கிரதை என்கிற வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சக்திசௌந்தர்ராஜன் இயக்கியிருக்கிறார். இவரும் முந்தைய வெற்றி தந்த உற்சாகத்தில் அதைத் தக்கவைத்தே ஆகவேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார். இந்தப்படபத்தில் லட்சுமிமேனன் முதன்முறை ஜெயம்ரவியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அவர் இதுவரை நடித்த எல்லாப்படங்களுமே வெற்றி என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர். இதனால் இந்தப்படமும் வெற்றியடையும் என்கிற நம்பிக்கை திரையுலகில் இருக்கிறது.

புதிய கதைக்களம், ஒரேநாளில் நடக்கிற கதை என்பதால் மிக வேகமான விறுவிறுப்பான திரைக்கதை, வெற்றிகளில் இருக்கும் இயக்குநர், நாயகன் மற்றும் நாயகி ஆகியோரின் கூட்டணி ஆகிய எல்லா அம்சங்களும் இந்தப்படத்தில் இருப்பதால் இந்தப்படமும் தனிஒருவன் வெற்றியைத் தக்கவைக்கும் படமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!