விஷால் லிங்குசாமி மோதலுக்கு என்ன காரணம்?

 லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்த சண்டக்கோழி 2005 ஆம் ஆண்டு வெளியானது. விஷாலுக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படம் அது. அதனால் அப்படம் வெளியான நேரத்திலிருந்தே அதன் இரண்டாம்பாகம் பற்றிய பேச்சுகள் இருந்தன.

அண்மையில் இரண்டாம்பாகங்களின் வரவு அதிகரித்தவுடன் இந்தப்படத்தின் இரண்டாம்பாகமும் தயாராகவிருக்கிறது என்று அறிவித்தார்கள். அதற்கான கதை மற்றும் திரைக்கதையை முழுமையாக லிங்குசாமி எழுதி முடித்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. விஷால் இப்போது மருது படப்பிடிப்பை முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று திடீரென சண்டக்கோழி 2 படத்தை ரத்து செய்வதாக விஷால் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பிலேயே, படைப்பாளிகள் தங்கள் வேலையில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது லிங்குசாமியை மறைமுகமாகத் தாக்கும் கருத்து என்று சொல்லப்படுகிறது.

திடீரென இப்படி ஒரு அறிவிப்பை விஷால் வெளியிடக் காரணம் என்ன? லிங்குசாமி, இப்போது அல்லுஅர்ஜூனை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். அந்தப்படத்துக்கான வேலைகள் மிகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. மார்ச் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்போதுகூட இயக்குநர் லிங்குசாமி ஐதராபாத்தில்தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அந்தப்படத்தை முடித்துவிட்டு அதன்பின் விஷால் படத்தைச் செய்ய அவர் திட்டமிட்டிருந்தாராம். இதை விஷால் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை முடித்துவிட்டு அல்லுஅர்ஜூன் படத்தை எடுங்கள் என்று அவர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் லிங்குசாமி அல்லுஅர்ஜூன் படத்தை முதலில் தொடங்கத் திட்டமிட்டதால் கோபமடைந்த விஷால் இப்படி அறிவித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!