சாமி வேடத்தில் நடிகர் அஜித்...களை கட்டும் அஜித் மகன் பிறந்தநாள் விழா...

நடிகர் அஜித் மகன் ஆத்விக் முதல் பிறந்தநாளை பிளக்ஸ் வைத்து போஸ்டர் ஒட்டி நலத்திட்ட உதவிகள் 

வழங்கி பிரமாண்டமாகக் கொண்டாடி வருவதுடன் எங்கள் அண்ணன் மகன் பிறந்தநாளை நாங்கள் கொண்டாடாமல் யார் கொண்டாடுவது என கேள்வியும் எழுப்புகிறார்கள் தஞ்சை மாவட்ட ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள். 

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பெரிய நடிகர்களின் பிறந்தநாள் என்றால் அவர்களுடைய தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் செம கொண்டாட்டமாக இருக்கும். பிறந்தநாள் வரும் சில மாதங்களுக்கு முன்பே பிளக்ஸ் வைத்தும் சுவர் விளம்பரம் எழுதியும் வாழ்த்துத் தெரிவித்து அதகளப்படுத்துவார்கள். பெரும் தலைகளுக்குக் கொண்டாடுவது போல் எல்லோராலும் தல என்று அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் மகன் பிறந்தநாளையும் பிளக்ஸ் வைத்து போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.

இதன் மூலம் தலயை போல நாங்களும் வித்தியாசமானவர்கள் என உலகுக்கு காட்டி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

நடிகர் அஜித் மகன் ஆத்விக் பிறந்த நாள் மார்ச் 2ம்

தேதி. அதற்காக தஞ்சாவூரின் முக்கிய இடங்களில் குட்டி தல வாழ்க என்றும் தங்கமகன் என்றும் வாழ்த்து தெரிவித்து மெகா சைஸ் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.அதில் அஜித் ஷாலினியுடன் ஆத்விக் இருப்பது போல் படமும் கோவில் கோபுரத்தில் சாமி வேடத்தில் அஜித் இருப்பது போலவும் பிளக்ஸ் வைத்துள்ளனர். மேலும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்க இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் அவர் மகள் பிறந்தநாளுக்கும் இதேபோல போஸ்டர் ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி தெறிக்க விட்டார்கள் இப்போது அதே உற்சாகத்துடன் அவர் மகன் பிறந்தநாளையும் தங்கள் வீட்டு விஷேசம் போல் கொண்டாடுகின்றனர் அவரின் ரசிகர்கள்.

இது குறித்து மாவட்ட அஜித் ரசிகர் மன்றத்தின் பொருளாளர் அஜித் அப்பாஸிடம் பேசினோம், நாங்கள் தலயை எப்பவுமே ஒரு தலைவனா மட்டும் பார்ப்பது இல்லை எங்க கூட பிறந்தவராதான் பார்க்கிறோம்.

அவர் நடித்த படம் வெளிவரும் போதே கட் அவுட் வைப்பது பால் அபிஷேகம் செய்வது என கலக்குவோம் அவரோட பையன் பிறந்த நாள் என்றால் சும்மாவா விடுவோம் அதான் களத்தில் இறங்கிட்டோம். நாளை காலை கோவில்களில் சிறப்புவழிபாடு அன்னதானம் என சிறப்பான ஏற்பாடு செஞ்சுகிட்டு இருக்கோம் நாங்க மட்டும் இல்லை தமிழகம் முழுக்கவே இதே போல் ஏற்பாடு செஞ்சுகிட்டு இருக்கிறார்கள். எங்க அனோஷ்கா பிறந்தநாள் வந்த போதும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி தீர்த்தோம் இப்ப அவர் பையன் பிறந்த நாளையும் திருவிழா போல் கொண்டாடத் தயாராகிவிட்டோம்.

ரசிகர்கள் கஷ்டப்படக்கூடாது என நினைப்பவர் அஜித் அவர் குடும்பத்தோட எப்பவும் நல்லா இருக்கணும் அதான் இந்த ஏற்பாடு என்கின்றனர் உற்சாகமாக.

சமூக ஆர்வலர்கள் சிலரோ, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் அஜித். இதுவரை அவர் பிறந்தநாளை மட்டும் கொண்டாடிய அவரது ரசிகர்கள் இப்போது மகள் மகன் பிறந்தநாளையும் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். இதை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் பின்பற்றத் தொடங்கி விடுவார்கள். அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது போல் இது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்க வேண்டும் அதுதான் அஜித் தன் ரசிகர்களுக்கு செய்யும் உதவி அவர்களுடைய வாழ்க்கைக்கும் நல்லது என்றனர்.

 

’குட்டிதல’ (??)  பிறந்த நாள் போஸ்டர் ஆல்பங்களுக்கு -->  http://bit.ly/1UwmDZK

 

-கே.குணசீலன்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!