வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (05/03/2016)

கடைசி தொடர்பு:18:36 (05/03/2016)

விஜயகாந்த்துக்கும், இவருக்கும் என்னதான் பிரச்னை?- ஒரு நடிகரின் ஆதங்க வீடியோ!

தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழலத் தொடங்கி இருக்கின்றன. தொண்டர்களும் உற்சாகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு கட்சிகள் மீதும் சரமாரியான விமர்சனங்களும் அள்ளி வீசப்படுகின்றன. இந்தநிலையில், விஜயகாந்த்தை சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறார் அ.தி.மு.கவை சேர்ந்த நடிகர் விஜய்கார்த்திக். விஜயகாந்த்துக்கும், உங்களுக்கும் என்னதான் பிரச்னை என்று கேட்டபோது, "நான் சினிமா படத்தயாரிப்பாளர் மற்றும் நடிகர்.

கருப்பசாமி குத்தகைக்காரர் படத்திலும், பூவா தலையா என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். 'அராத்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய அலுவலகம் சாலிகிராமத்தில் உள்ளது. இது விஜயகாந்த் வீட்டின் எதிரில் உள்ளது. அம்மாவின் நல்லாசியுடன் என்ற விளம்பர பேனரை அங்கு வைத்து இருந்தேன். அதை எடுக்குமாறு என்னிடம் சொன்னார்கள். ஆனால் அதை நான் அகற்றவில்லை. அம்மாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியான அன்று, காவல்துறையினர் என்னை அலுவலகத்தை விட்டு வெளியே செல்லச் சொன்னார்கள்.

அம்மா, விடுதலை என்ற தீர்ப்பு வந்ததும் பட்டாசு வெடிக்க முயன்ற போது, விஜயகாந்த் கட்சியினர் என்னையும், காரையும் அடித்து நொறுக்கினார்கள். போலீஸார் வந்து என்னை மீட்டனர். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். விருகம்பாக்கம் போலீஸார், விஜயகாந்த் உள்பட சிலர் மீது புகாரை பதிவு செய்து சி.எஸ்.ஆர் கொடுத்தார்கள். ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தேன். அதன்பேரில் விஜயகாந்த் உள்பட சிலர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து எப்.ஐ.ஆர் போடப்பட்டது. இதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

இதுதொடர்பாக விரைவில் போலீஸ் கமிஷனரை சந்தித்து முறையிட உள்ளேன். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவேன். விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டேன். இதற்கிடையில் சென்னை நந்தனத்தில் அம்மாவின் பிறந்த நாளுக்காக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைத்திருந்தேன். விஜயகாந்த்தின் தூண்டுதலின்பேரில் டிராபிக் ராமசாமி என்னுடைய பேனரை மட்டும் அகற்றியதோடு என்னுடன் தகராறில் ஈடுபட்டார்" என்றார்.

வீடியோ, செய்தி: எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்