'' நிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி'' -ஒரு செய்தியாளரின் நேரடி அனுபவம்

ஆட்டோ டிரைவராக தனது பயணத்தை தொடங்கியவரின் கலை உணர்வுமிக்க ,மிமிக்ரி கலைஞனாக தன்னை இந்த சமூகத்துக்கு அடையாளம் காண்பித்தவர் கலாபவன் மணி. கிராமிய பாடல்கள்தான் இவரது முதல் அடையாளம். அதன் மூலம் மலையாளத் திரையுலகில் புகுந்து கையில் எடுக்காத வேடங்கள் கிடையாது. நடிப்பு மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர் வந்திருந்தனர். இளங்கோவன் பேசிய பின், கலாபவன் மணியின் கச்சேரி நடந்தது. அதனை தூரத்தில் இருந்து பார்க்கும் ஒரு ரசிகனாக நான் இருந்தேன்.போக்குவரத்துக்கு இடையூறாக மக்கள் சாலையில் நிரம்பியிருந்தனர். பேருந்துகள் போக முடியவில்லை வரமுடியவில்லை. உண்மையை சொல்லப் போனால் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கிடைக்காத வரவேற்பு கலாபவன் மணி வந்த போது இருந்தது.

நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மக்கள் நெருக்கடியில் உள்ளேவும் போக முடியாது. வெளியேவும் வர முடியாது. அப்படி சிக்கிக் கொண்டவர்களின் நானும் ஒருவன். கூட்டம் நடந்த இடமோ மலைப்பகுதி. கடும் குளிர், பனி படர்ந்திருந்தது. நேரமோ நடுநிசி. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் கதறினர். ஒரு பக்கம் சில்மிஷக்காரர்களின் சேட்டையும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

திரும்பும் இடமெல்லாம் மணி சேட்டா, மணி சேட்டா என்ற குரல்தான் எழுந்து கொண்டிருந்தது. மேடை ஏறிய கலாபவன் மணி, இதனை பார்த்து அதிர்ந்து போனார். ஒரு பக்கம் பேருந்து வரிசை கட்டி நிற்க, இன்னொரு பக்கம் பெண்கள் அழும் சத்தம். நிலைமையை புரிந்து கொண்டார். எனக்கோ கை முறிந்து விட்டதோ என்ற உணர்வு. எனக்கே இப்படியென்றால் பெண்கள் நிலையை சொல்ல வேண்டுமா? முதலில் போக்குவரத்தை சீர் செய்தால் எல்லாம் ஒழுங்குக்கு வந்து விடும் என்று கருதினார் போலும்.

மணி பேசினார், முதலில் போக்குவரத்துக்கு வழி விட்டால்தான் நிகழ்ச்சி நடக்கும் என்று கூறியவாறு ஒதுங்கிக் கொண்டார்.ஆனாலும் கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. மீண்டும் மைக்கில் மணி, மக்கள் போக வழி விடுங்கள் என்றார். கூட்டம் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நெருக்கிப்பிடித்து கூட்டத்தில் இருந்து வெளியேற நான் முயற்சித்தேன். சட்டை வியர்வையில் குளித்திருந்தது. நல்ல வேளை கை முறியலில்லை. ஒரு வழியாக கூட்டத்தில் இருந்து தப்பித்தேன். மக்கள் கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் மக்கள் கலைஞனாக கலாபவன் மணி எனது இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். அவருக்கு எனது இதய அஞ்சலி!

-ராம்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!