‘தெறி’ படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? விஜய் அப்செட்

இப்போதெல்லாம் விஜய் படங்கள் ரிலீஸுக்கு முன்பே பல போராட்டங்களை சந்தித்துவிட்டுத்தான் திரையைத் தொடுகின்றன. அந்த வரிசையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படத்துக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. காரணம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல். பொதுவாக, வரிவிலக்கு என்பது அரசே பார்த்து வழங்கும் ஒரு சலுகைதான். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசு எந்த சலுகைகளையும் வழங்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. அதன்படி ‘தெறி’ படத்துக்கு வரிவிலக்கு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

 

வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க முதல் தகுதி, சம்பந்தப்பட்ட படம் சென்ஸார் ஆகியிருக்கவேண்டும். சென்ஸார் ஆகியிருந்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே வரிவிலக்குக்கு விண்ணப்பமும் செய்திருந்து அரசின் நிபந்தனைகளுக்கு அந்தப் படம் உட்பட்டிருந்தால் அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் வரிவிலக்கு கிடைக்கும். ஆனால், ‘தெறி’ படக்குழுவினர் இன்னும் சென்ஸார் சர்ட்டிஃபிகேட் வாங்கவில்லை.

ஒருவேளை படக்குழுவினர், ‘இந்தப் படம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட படம்’ என காரணம் காட்டி வரிவிலக்குபெற  முயலுவார்களா.. அல்லது வரிவிலக்கு கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களா என்பது தெரியவில்லை.

இந்தப்படம் வியாபாரம் தொடர்பாக வருகிற செய்திகளைப் பார்த்தால் வரிவிலக்கு இல்லாமல் படம் வெளியானால் அது பொருளாதாரரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. இதனால் படத்தை ஏப்ரலில் வெளியிடலாமா? அல்லது வெளியீட்டை இரண்டு மாதங்கள் தள்ளிப்போடலாமா? என்று இப்போது யோசித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எது எப்படியோ படத்துக்குப்படம் சிக்கல் வருகிறதே என்று விஜய் அப்செட்டாகியிருக்கிறாராம். 

 தாட்சாயணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!