தஞ்சை விவசாயியின் வங்கிக்கணக்கில் ஒரு லட்சம் போட்ட கருணாகரன் | Actor Karunakaran helps affected farmer

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (12/03/2016)

கடைசி தொடர்பு:11:53 (12/03/2016)

தஞ்சை விவசாயியின் வங்கிக்கணக்கில் ஒரு லட்சம் போட்ட கருணாகரன்

தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், மகேந்திரா கோட்டாக் நிறுவனத்தில் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். இதற்கான பெரும்பகுதி தொகையை வட்டியுடன் செலுத்தியுள்ளார். நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்பதற்காக டிராக்டர் கடன் நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளனர்.

டிராக்டரை பாலன் தர மறுத்ததால் காவல்துறையினரும், கடன் நிறுவன ஊழியர்களும் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள். இச்சம்பவத்தை அங்குள்ள பொதுமக்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினார்கள். இது  தமிழ்நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை விகடன் இணையதளத்தில் வெளியிட்டதும் காட்டுத்தீ போலப் பரவத்தொடங்கியது. இதனால் பரபரப்பு உருவானது. 

விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.இந்நிலையில் விவசாயி தாக்கப்பட்ட நிகழ்வை அறிந்த நடிகர் விஷால், அவருக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய டிவிட்டரில், உங்களை யாரென்று எனக்குத் தெரியாது, நீங்கள் ஒரு விவசாயி என்பதால் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லியிருந்தார்.

இதற்கிடையே, கலகலப்பு படம் மூலம் அறிமுகமாகி பீட்சா, சூது கவ்வும் , யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா, என பல படங்களில் நடித்தவர் கருணாகரன். தற்சமயம் இறைவி, ரயில், ஜாக்சந்துரை உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அவர் ஒரு புது முடிவு எடுத்திருந்தார்.  அது பற்றி அப்போது ட்விட்டரில்,

'ஒவ்வொரு படத்திற்கும் நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு லட்சத்தை போராடி வரும் ஏழை விவசாயக் குடும்பங்களுக்குக் கொடுக்க இருக்கிறேன். அதை இன்றிலிருந்தே ஆரம்பிக்க உள்ளேன். என ட்வீட் செய்திருந்தார்.

இப்போது தஞ்சை விவசாயி தாக்கப்பட்ட நிகழ்வை அறிந்தவுடன் அவரைத் தொடர்புகொண்டு அவருடைய வங்கிக்கணக்கில் ஒரு இலட்சம் செலுத்திவிட்டாராம் கருணாகரன்.
கஷ்டத்தில் இருப்பவனுக்கு உதவி செய்ய ஒரே இனம், மொழி, சாதி, மதம், தேசத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மனிதனாக இருந்தால் போதுமானது என்று பலரும் அவரைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்