திருட்டு விசிடியில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா? அதிரவைக்கும் தகவல்கள்

தோ அடுத்த வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. அவசரமான உலகில் பொழுதுபோக்கு என்றால் அதற்கு முதலிடமும் முக்கிய இடமும் சினிமாவுக்கு மட்டுமே. இந்த வாரமும் தமிழில் மட்டும் ஐந்து படங்கள்  சுடச்சுட ரெடி. பிறமொழிப்படங்கள், ஹாலிவுட் என்று எடுத்துக் கொண்டால் எண்ணிக்கை கூடும்.

என்னதான் பீச் மணலில் காலாற நடந்தாலும், ஜயண்ட் வீலில் சுத்திக்கொண்டே கத்தினாலும் நம் உணர்வுகளுடன் மோதி நம் பொழுதைப் போக்க வைப்பது சினிமா தான்.  நம் உணர்வுகளை யாரோ ஒருவர் நடிக்க திரையில் பார்க்கும்போது ரசிக்கிறோம். சிரிக்கிறோம். அழுகிறோம். அமைதியாகிறோம்.

சரி போரடிக்காம விஷயத்துக்கு வருவோம்.

ஒரு ஐம்பதோ, அறுபதோ டிக்கெட்டு, இடைவேளையில் பாப்கார்னோ, ஐஸ்க்ரீமோ ஒரு ஐம்பது , இதே மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் ரூ120 டிக்கெட்டு , இடைவேளைக்கு ஒரு 100 எனக் கொண்டால் சுமாராக 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு எண்ணூறு முதல் 1000 ஆகும். எனவே புத்திசாலித்தனமாக கணக்கிட்டு ஒரு படத்துக்கு இவ்ளோ செலவா , என யோசித்து ஒரு சிடி வாங்கினால் நாற்பதே ரூபாயில் , அம்மா, அப்பா, முதல் ஒன்று விட்ட அக்கா கணவனின் தங்கை வரை பரிமாறிக்கொள்ளலாம்.

இதைக் காட்டிலும் இன்னொரு முறை இருக்கிறது, கொஞ்சம் டெக்னிக்லாக வேலை செய்தால் விசிடியில் ஒரு மாதத்துக்கு 10 படம்  எனக் கணக்கிட்டு அதற்காக ஒரு அன்லிமிடெட் இணைய வசதி வைத்துக் கொண்டால் 100 படம் கூட இலவசமாகக் காணலாம். என்ன ஒரே குறை? படம்  கொஞ்சம் டல்லடிக்கும், திரையரங்க பார்வையாளர்களின் சத்தம் கேட்கும். இந்த வியாபரத்திற்கு இன்னும் நாம் அமோக வரவேற்பு கொடுத்தால் அந்தச் சத்தங்களும் அடங்கி தியேட்டரில் ஒரு ஈ, காக்கா கூட இல்லாமல் இன்னும் தெளிவான ஒலியுடன் கேட்கும் வாய்ப்பும் கூட கிடைக்கலாம்.

திருட்டு விசிடிக்களை விடுங்கள் தயாரிப்பாளர் காசும், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு மட்டுமே சுரண்டப் படுகிறது,. அவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன. ஆனால் இணையதளத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மிகப்பெரிய வியாபாரம் நடப்பது உங்களுக்குத் தெரியுமா?

இதோ சம்மந்தப்பட்ட தளத்திற்கு எந்தப் படம் முதலில் வருகிறதோ அந்தப் படத்தை முதலில் பார்ப்பேன் என்கிறார் இந்த நண்பர். ஒரு டிக்கெட்டில் நீங்கள் ஒரு தயாரிப்பாளருக்குக் கொடுக்கும் பணம் வெறும் 120 ரூபாய், ஆனால் ஒரு படம் பார்க்க இணையத்தில் நீங்கள் கொடுப்பது லட்சங்களில். அதிர்ச்சியாக இருக்கலாம். உண்மை அதுவே.

நீங்கள் பார்க்கும் ஒரு படத்தை அடைய வேண்டி க்ளிக் செய்தவுடன் சுமாராக மூன்று முதல் நான்கு விளம்பரத் தளங்கள் ஓபன் ஆவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு விளம்பரமும் சுமார் 10 முதல் 40 ஆயிரங்களைத் தொடும், அப்படியே படம் பார்க்கும் தளத்தை அடைந்தவுடன் உங்களுக்கு பாருங்கள் என அவர்கள் கொடுத்த சின்ன இடத்தைச் சுற்றி இருக்கும் விளம்பரங்கள் ஒன்று முதல் 10 எனக் கொண்டால் ஒவ்வொன்றும் சுமாராக 5 முதல் 20 ஆயிரங்களைக் கொடுக்கும். ஆனால் இதற்காக அவர்கள் செலவு செய்வது சர்வர் மெயிண்டெய்ன் மற்றும் தளம் என மாதத்திற்கு 15 முதல் 20 ஆயிரங்கள் மட்டுமே.

இதற்கு நாம் செய்யும் வேலை என்ன தெரியுமா? காசே வாங்காமல் ஏதோ ஒரு தளத்துக்கு அழகாக வேலை செய்துகொண்டு இருக்கிறோம். அதுவும் நம் காசில், நம் இணைய சேவையைப் பயன்படுத்தி. எல்லாவற்றிற்கும் மேல் கோடி கோடியாகக் கொட்டிப் படமெடுத்து கண்டிப்பாக ஓடி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் முதல், இரவும் பகலுமாக நம்மை சந்தோஷப்படுத்த பாடுப்பட்ட இயக்குநர், நடிகர்கள், ஏன் ஏழையாகவே இன்றும் இருக்கும் லைட் மேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் உழைப்பையும் கடலில் கொட்டிய பெருங்காயமாய் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

இதே ஒரு பீச் மணலை விசிடியில் காட்டினால் சந்தோஷப்படுவோமா, இல்லை ஜயண்ட் வீலை இணையத்தில் காட்டினால் ஜாலியாவோமா, அதெப்படி ஒரு படத்தை மட்டும் நம்மால் விசிடியிலோ, அல்லது 20 இன்ச் திரையிலோ காட்டினால் சந்தோஷப் பட முடிகிறது. காரணம் மற்றதில் நாம் கணக்குப் போடுவதில்லை. சினிமாவை ஒரு ஆடம்பர செலவாகவே நினைத்து இன்னமும் உதாசீனம் மட்டுமே செய்கிறோம். ஆரம்பத்தில் உணர்வுப்பூர்வமாக பார்க்கிறோம் என்றோமே, ஆம் அதற்காக செலவு செய்வதையும் கூட உணர்வு பூர்வமாக பார்ப்பதால் தான் நம்மால் திருட்டு விசிடிக்களையும், திருட்டு இணையங்களையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அதையே கொஞ்சம் புத்திசாலித்தனமாக நினைத்தால் 120 ரூபாய்க்கு நம்மூர்காரர்கள் பிழைப்பார்கள். இன்னும் நம்மை சந்தோஷப்படுத்த படங்களைக் கொடுப்பார்கள். அப்படியெனில் இந்த இணையவாசிகள் நம்மூர்க் காரர்கள் இல்லையா என்றால் தமிழ்ப் படங்களை மட்டுமே கொடுக்கும் இணையங்களின் ஹெட் ஆபீஸ் கூட தளத்தை முடக்கிவிட முடியா வண்ணம் அயல்நாடுகளில் இருந்து நடத்துகிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

- ஷாலினி நியூட்டன் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!