மனிதர்களுக்காகவும் பேசுங்கள் - சினிமாக்காரர்களுக்கு ரசிகர்கள் வேண்டுகோள்

விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துவருகிறவர் த்ரிஷா.

சமீபத்தில் வெறிபிடித்த தெருநாய்களைக் கொல்ல மாநகராட்சி முடிவெடுத்த போது அதற்கு எதிராக குரல்கொடுத்தவர்.  ஜல்லிகட்டுக்கு எதிராக போர்கொடி தூக்கிய விலங்குநல அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதுவராகவும் த்ரிஷா செயல்பட்டுவருகிறார் என்பதால் ஜல்லிக்கட்டு பிரச்னையின் போதே பீட்டா அமைப்பை விட்டு த்ரிஷா விலக வேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தற்பொழுது, உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சக்திமான் என்ற போலீஸ் குதிரையின் கால் உடைந்த சம்பவம் வடமாநிலங்கள் முழுவதும் வைரலாக பரவியது. இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில், “ உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும். இதனை எனது பிரார்த்தனையாக வைக்கிறேன். இந்த சம்பவம் கேவலமான செயல்’’ என்று குறிப்பிட்டிருந்தார்” இந்த ட்விட் த்ரிஷாவிற்கே எதிராகத் திரும்பிவிட்டது.

வடமாநிலங்களில் குதிரை கால் உடைந்த சம்பவம் நடந்தேறிய நாட்களில், தமிழகத்தில் ஆணவக்கொலை உடுமலை பகுதியில் நடந்தேறியதால், தமிழ் ரசிகர்கள் த்ரிஷாவிற்கு எதிராக குரல்கொடுத்திருக்கின்றனர்.

த்ரிஷாவின் ட்விட்டிற்கு எதிராக இடம்பெற்ற சில ட்விட்கள் இதோ,

மலைத்தோழன் “இந்தியாவில் மனித கொலைகள் அதிகமாக நடந்தேறிவருகிறது அதற்கெல்லாம் குரல்கொடுக்க மாட்டீர்கள் நீங்கள்? அல்லது குரல்கொடுக்க பயமா?”

கணேஷ், “ குதிர கால உடைச்சா ட்விட் போடுவீங்க, அங்க ஜாதி வெறில ஒருத்தன வெட்டுனா வீடியோ மட்டும் தான் பாப்பீங்க! நல்ல மனிதநேயம்”

கோபால் நாராயணன், “ மனிதநேயம் இல்லை, எல்லாம் பீட்டாவிலிருந்து வரும் பணம் தான்”

இப்படிப் பல ரசிகர்கள் த்ரிஷாவிற்கு எதிராகப் பேசிவருகின்றனர்.

பிரபலங்கள் விலங்குகளுக்கு ஆதரவாக பேசுவது மட்டுமல்லாமல், மனிதர்களுக்கு ஆதரவாகவும் தங்கள் குரலை எழுப்புங்கள். நிச்சயம் பிரபலங்களின் குரல் அரசின் செவிகளில் விழும் என்ற நம்பிக்கையிலேயே ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திவருகின்றனர் என்பது மட்டும் புரிகிறது.

 த்ரிஷாவிற்கு மட்டுமல்லாமல், பிரபலங்களாக இருக்கும் அனைவருக்கும் ரசிகர்களின் கருத்துகள் பொருந்தும்.  மனிதநேயம் சார்ந்த செயல்பாடுகளுக்கு பிரபலங்கள் ஒருமித்த குரல்கொடுத்தால், அப்பிரபலங்களின் ரசிகர்களும் பின் நின்று குரல்கொடுக்கத் தயார் தான். 

நடிகர்களின் படங்களை ரசிப்பதிலும், அவர்களின் இணையப்பக்கத்தில் பதிவிடும் செல்ஃபிக்களை பார்ப்பதிலும் மட்டும் ரசிகர்களை அடக்கிவிடாமல், ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக பிரபலங்கள் செயல்பட்டால் நிச்சயம் மனிதம் சார்ந்த பிரச்னைகளுக்கு சில தீர்வுகளைக் கொண்டுவரமுடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!