Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சவாரி படம் தொடங்கியதிலிருந்து ரிலீஸ்வரை நடந்த சுவையான கதை - செழியன் விவரிக்கிறார்

புதுமுக இயக்குநர், புதுமுக நடிகர்களுடன் புதுமுயற்சியாக நேற்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் சவாரி. செழியன் ஒளிப்பதிவு, கிஷோர் எடிட்டிங் என்று பலமிக்க இரண்டு தொழில் நுட்பக்கலைஞர்கள் வேலை செய்திருப்பது இந்தப் படத்திற்குப் ப்ளஸ்.

ஒரு காரும் மூன்று முக்கிய கேரக்டர்களுடன் “ஜில்ஜங்ஜக்”விஷால் சந்திரசேகர் இசையும், நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தில் வந்த குகனின் இயக்கமும் தான் இப்படத்திற்கான அறிமுகம்.

இந்தப் படத்தில் வேலைசெய்த அனுபவங்களை செழியன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டதிலிருந்து,...

“முழுக்க தமிங்கிலீஷில் இருந்தபோதும் திரைக்கதையைப் படிக்கும்போதே அதிலிருந்த வேகம் பிடித்திருந்தது. கேமரா,மற்றும் உபகரணங்கள் தவிர வழக்கமான படப்பிடிப்பில் இருக்கும் போலியான எந்த உபரி சம்பிரதாயங்களும் இல்லை.நடிகர்களைச் சேர்த்து மொத்தமே பதினைந்து பேரும் ஒரு காரும் தான் படப்பிடிப்புக்குழு.அதிலும் நடிப்பவர்கள் நடித்து முடித்ததும் உதவி இயக்குனர்களாக மாறுவார்கள்.ஏனெனில் குழுவில் இருந்த அனைவருமே நண்பர்கள்.எல்லாருமே டியூட்,ப்ரோ,மச்சான்,அண்ணா..நான் மட்டும்தான் சார்.

எதாவது தவறு நடந்தால்..

'என்ன ப்ரோ..'

'கன்..இங்க இருக்கு..ட்யூட்'

'சார் ஸாரி சார்..'

ஒரு புன்னகை.அவ்வளவுதான் கோபம்.

போலீஸாக நடித்தவர் உணவு பரிமாறுவார்.எங்களைப் பிக் அப் செய்கிற கார் டிரைவர் காட்சியில் அடியாளாக வருவார்.நள்ளிரவில் இரண்டுபேர் சாப்பிடாமல் நிற்பார்கள்.

'ஏன்?'

'சார் எவனோ ரெண்டு பொட்டலத்தை சுட்டுட்டான் சார்..'

எந்தக் காட்சியை எடுக்கிறோம் என்று அங்கிருக்கும் எல்லோருக்கும் தெரிந்தது.ஒருவர் பேசவேண்டிய வசனம் இன்னொருவருக்குத் தெரிந்தது.எழுதிய திரைக்கதையில் எந்தத் திருத்தமும் படப்பிடிப்பில் நடக்கவில்லை.முக்கியமாக மைக் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் இங்கு ஷூட்டிங் நடக்கிறது என்றால் நம்பமாட்டார்கள்.

வழக்கமாக படப்பிடிப்புகளில் property,continuty என்று உதவி இயக்குனர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.இதில் அதுவும் இல்லை. எல்லாம் முன்னமே ஒத்திகை பார்த்து தெளிவாக இருந்தது.
அற்புதமான அனுபவமாக இருந்தது.அதிலும் ஒகேனக்கல் காட்டுக்குள் படம் எடுத்த நாட்கள் சுவாரஸ்யமானவை.

ஒருநாள் படப்பிடிப்பில் மழை வர 'இன்னிக்கு யாரோ குளிக்காம வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.. நீயா' என்று கேட்க சார் அவன் சார்.. சார் இவன் சார் . என்று கடைசியில் இயக்குனர் உட்பட குழுவில் இருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் கை காட்டிச் சிரித்தார்கள்.'சார் எந்திரிக்க லேட் ஆயிருச்சு..சார் இவன் டீசர்ட் கூட மாத்தல.'

'நேத்து போட்டது கண்டினியூட்டி சார்.'

ஒரு ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிற கிரிக்கெட் போல சினிமா அவர்களுக்கு ஒரு சந்தோஷமான விளையாட்டு. அந்த விளையாட்டில் நானும் இருந்தேன்.ஆனால் வேலையில் கொஞ்சம் கூட தீவிரத்தன்மை குறையவில்லை. கவனம் சிதறவில்லை. ஓர்மை இருந்தது.சினிமாவைத்தவிர வேறு கவனப்பிசகலோ வெற்றுப் பேச்சோ இல்லை.

எடிட்டர் கிஷோர் இந்தப்படத்தில் இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன்.பட்ஜெட் காரணமாக அவர் படத்திற்குள் வருவதில் தயக்கம் இருந்தது. பிறகு எனக்காக ஒத்துக்கொண்டார்.அவர் பெரிய படங்கள் செய்துகொண்டிருந்ததால் இந்தப்படத்தின் எடிட் தாமதமாகிக்கொண்டே இருந்தது.
'கிஷோர்..'

'சார் முடிச்சிட்டேன் சார்..எங்க ஆபீஸ்க்கு நீங்க வந்ததே இல்ல வாங்க சார்'. அலுவலகத்தைக் காட்டினார்.

எனக்கு சவாரியின் முதல்பிரதியை அவரது அறையில் ஓடவிட்டுவிட்டு 'ரொம்ப நல்லா இருக்கு சார்..பாருங்க சார்' என்று ஒரு கிளம்பிவிட்டார்.

முதல்பாதி முடிந்ததும் உள்ளே வந்தார்.சில உரையாடல்களுக்குப் பிறகு 'பாருங்க சார்'
இரண்டாம் பாதி ஓடி முடிந்ததும் அவரைப் பாராட்டுவதற்காக வெளியில் வந்தேன். அலுவலகத்தின் வெளியில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தார்.உதவியாளர் எழுப்ப அருகில் போக, வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவரை எழுப்பாமல் வெளியில் வந்தோம்.
பிறகு தொலைபேசியில் பேசும்போது..

'கிஷோர் ரொம்ப தேங்க்ஸ்..'

'சார்...நல்லா வந்திருக்குல்ல சார்..எனக்கு பிடிச்சிருக்கு சார்..' என்று சொல்லி திரைக்கதையில் இல்லாத வரிசையில் சில காட்சிகளை மாற்றியதைச்சொன்னார்.

'அது நல்லாயிருக்கு கிஷோர்'

'தேங்க்ஸ் சார்..இன்னும் கொஞ்சம் ட்ரிம்மிங் இருக்கு சார்'என்றார்.

சில நாட்கள் கழித்து 'சார்..முடிச்சிட்டேன் சார்..இப்ப பாருங்க..படம் இன்னும் ஸ்பீடா இருக்கு' என்றார்.
அதுதான் நாங்கள் கடைசியாகப் பேசியது.

கிஷோருக்கு எப்படி நன்றி சொல்வது?

படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. படத்தின் துவக்க காட்சிகளை கிழக்கு கடற்கரைச் சாலையில் எடுத்தோம்.நெரிசல் ஓய்ந்தபிறகுதான் எடுக்கமுடியும்.சாலையில் எடுக்க அனுமதி இல்லை.Guerrilla Film making தான்.எங்களிடம் மூன்று கார்கள் இருந்தன.ஒரு காரில் நடிகர்கள். இன்னொரு காரில் உதவி ஒளிப்பதிவாளர்கள்.உதவி இயக்குனர்கள்.கேமரா காரின் முன்னால் இருக்கிறது. இன்னொரு காரின் கடந்துபோகும் வெளிச்சம்தான் லைட்டிங். செல்போன் வழியாகப் பேசி காட்சிகளை எடுத்தோம். திரும்ப ரீ டேக் என்றால் நள்ளிரவில் சாலையில் எதிர் எதிர் முனைகளுக்கு கார்கள் விரையும்.
சுவாரஸ்யமான இரவுகள்.படம் வெளிவந்தபின் அதன் காட்சிகள் குறித்து எழுத இன்னும் நிறைய இருக்கிறது.

இந்தப் படத்தை ஆரம்பித்ததில் இருந்து வெளியிடுவதில் வரை நடந்த விஷயங்களை தனிப் படமாக எடுக்கலாம். அவ்வளவு சிரமங்கள்,அவ்வளவு தடைகள்,காமெடிகள், சஸ்பென்ஸ்கள். வணிக சினிமாவின் போட்டிகளுக்கிடையில் இப்போது குகன், கார்த்தி அவர்களது நண்பர்கள் முயற்சியில் இந்தப்படம் வெளியாகிறது.குறும்பட நண்பர்களின் உதவியுடன் ஆர்யாவைப் பிடிக்கிறார்கள்.அவர் வீட்டிலேயே டீஸர் வெளியிடுகிறார். விஜய் சேதுபதி ஒரு தோட்டத்தில் ஆடியோ வெளியிடுகிறார்.விஜய் ஆண்டனி அவரது வீட்டில் இருந்து ட்ரெய்லர் வெளியிடுகிறார்.பாடல் ரேடியோ சிட்டியில் வெளியிடப்படுகிறது. நானும் அந்த எளிய நிகழ்வுக்குப் போயிருந்தேன்.

இசை வெளியிடுமுன் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஒரு ப்ளாஸ்டிக் கத்தியைப் பிடித்துக்கொண்டார்.நானும் குகனும் சேர்ந்து ஒரு கத்தி.best wishes sawaari team என்று எழுதி இருந்த கேக்கை நாங்கள் வெட்ட கூடியிருந்த நண்பர்கள் ஏழுபேர் கைதட்டினார்கள்.அதில் மூணுபேர் ரேடியோ சிட்டி அலுவலர்கள்.பிறகு நடிகர் கிருஷ்ணா வர அவரும் நானும் பெரிய மாதிரி சிடியின் உறையைக் கிழித்தோம். அவ்வளவுதான் ஆடியோ ரிலீஸ்.

ஒருமுறை நண்பர் ஒருவரின் காதல் திருமணத்தை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடத்தினோம்.அன்று பெரிய மூகூர்த்தம் என்பதால் கோயில் முழுக்கத் திருமணங்கள். அவ்வளவு ஆடம்பரம். வெளியே கார்கள் நின்றன. மாப்பிள்ளை அழைப்புக்கு ஒரு யானை நின்றது. ஆனால் நாங்கள் பொண்ணு மாப்பிள்ளையோடு சேர்த்து ஐந்து பேர்தான்.டவுன் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓரமாக நடந்துபோனோம். திருமணத்திற்கான டோக்கன் வாங்கிக்கொண்டு தூண் ஓரமாக மணமக்கள் மாலைமாற்ற நாங்கள் மூன்றுபேரும் கைதட்டினோம்.

பெண் குமுறி அழுக நாங்கள் எல்லோரும் கண்கலங்க நின்றிருந்தோம். அதுவும் திருமணம்தான். அவர்கள் இப்போதும் வெற்றிகரமான தம்பதிகள்தான். அதுபோல தமிழ்சினிமாவின் பிரபலமான நடிகர்கள்,ஆடம்பரங்கள் பிரமாண்டங்கள், போஸ்டர்கள் கூட இல்லாமல் ஒரு சினிமாவை எடுத்து ஆடியோ வெளியிட்டு அது திரைக்கும் வரப்போகிறது.

இந்தத் திரைப்படத்தை சாத்தியமாக்க கடினமாக உழைத்த எனது உதவியாளர்கள், வீரா,மணி,TAG விஜி,சிவராஜ் சார் இந்த முயற்சியை முதலில் முன்மொழிந்த  திரு.வெண்கோவிந்தா,தற்போது வழிமொழிகிற பிரதர் எண்டெர்டெயின்மெண்ட் நண்பர்கள்,தேனாண்டாள் பிலிம்ஸ் அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன்.ஒரு திரைப்படத்தை நிகழ்த்துவது எத்தனை பேரின் கூட்டுமுயற்சி.அந்த முயற்சி உண்மையாக இருந்தால் அது எப்படியும் வெளிவந்துவிடும்.

இது Psycho Road thriller. என்ன கதை சொன்னாலும் அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதுதான் வணிக சினிமாவின் அடிப்படையான விதிகளில் ஒன்று.Black humour கலந்து அந்த விதியை இந்தப்படம் சுவாரஸ்யமாக நிகழ்த்தும் என்று நம்புகிறேன். எளிமைதான் எப்போதும் வலிமையானது.மனதுக்கும் நெருக்கமானது.அந்த எளிமை வெற்றிபெறும்போது அதுதான் நிஜமான பிரமாண்டம்.
அதுவும் நிகழும் என்று நம்புகிறேன்.

வாழ்த்துகள் குகன்.

வாழ்த்துக்கள் கார்த்தி,பெனிட்டோ,மதி,விஷால் சந்திரசேகர்(இசை),சதீஷ் (கலை) மற்றும் எளிய குழுவின் நண்பர்கள் அனைவருக்கும்”

- செழியன்-

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement