“'தெறி’ படம் சொல்லும் கதை என்ன?” - இயக்குநர் அட்லி | Director Atlee Speech at Theri Audio Launch #Theri

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (22/03/2016)

கடைசி தொடர்பு:11:10 (22/03/2016)

“'தெறி’ படம் சொல்லும் கதை என்ன?” - இயக்குநர் அட்லி

ராஜாராணி என்று முதல் பந்தில் சிக்ஸர் அடித்த இயக்குநர். இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பட்டறையிலிருந்து வந்த வைரம். அட்லி. க்ரே நிற ஃபேண்ட்டில் ஆஃப் வொய்ட் டிஷர்ட்டை டக் இன் பண்ணிய படி, வெள்ளை கோட்டுடன் ஸ்டைலிஷாக வந்திருந்தார் தெறி இசை வெளியீட்டு விழாவிற்கு.

 மேடையேறி மைக் பிடித்து லேசாக இரும, ‘எல்லாருக்கும் வணக்கம்’ என்று லேசாக இரும.. 

ஸ்பீக்கரில் கேட்டது.. ’ என் ரத்தத்தின் ரத்தமான உடன்..’ என்று எம்ஜியார் குரல்.

‘அச்சச்சோ.. நான் சொல்லலைங்க’ என்று திரும்பியவர்.. மைக்கை சரியாகப் பிடித்து.. ‘இப்பக் கேட்குதா?’ என்று பேச ஆரம்பித்தார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தங்குதடையில்லாமல் பேசினார்.

விஜய், தாணு, சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, நைனிகா, இயக்குநர் மகேந்திரன் என்று பலரைப் பற்றியும், தெறி  எதைச் சொல்லும் படம் என்பது பற்றியும் அவர் பேசியதன் முழுத் தொகுப்பு..

எனக்கு மேடை பயம் இல்லைன்னு என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்லுவாங்க. மொத தடவையா, எனக்கு லைட்டா நடுக்கமா இருக்கு. நிறைய பேர் பாராட்டினாங்க. அதையெல்லாம் தாண்டி, எனக்கு இன்ஸ்பிரேஷன்னா அது மகேந்திரன் சார்தான். மணிரத்னம் சாருக்கே அவர்தான் இன்ஸ்பிரேஷன்னு சொல்லிருக்கார். அந்த மகேந்திரன் சாரே என் படத்துல நடிச்சிருக்கார்ங்கறதும், இங்க என்னைப் பத்தி நிறைய பேசினதும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. மறக்க முடியாத மேடையா இது ஆகிடுச்சு. அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ரொம்ப பொறுப்பைக் கொடுத்திருக்கு. ரொம்ப நன்றி சார்.


‘தெறி’ படத்தைப் பத்தி பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி மூணு பேருக்கு நன்றி சொல்லணும். முதல் நன்றி, விஜய் டிவி மகேந்திரன் சார். ’ராஜா ராணி’ முடிச்சுட்டு அவர்கிட்ட இந்தக் கதையை மூணு லைன் சொன்னப்ப, ‘இது விஜய் சாருக்கு அருமையா செட் ஆகற கதை’ன்னு சொன்னார். அதான் நானும் நெனைச்சிருந்தேன். அடுத்தது, என் குடும்பம். ராஜாராணி முடிச்சுட்டேன். ஒரு ஹிட் குடுத்துட்டா அடுத்து என்ன பண்ணணும்னு நாம ஒண்ணு நெனைச்சிருப்போம். ஆனா, நம்மள சுத்தி இருக்கற எல்லாரோட உறுதுணையும் அதுக்கு வேணும். அதை என் அம்மா பண்ணினாங்க, என் மனைவி பண்ணினாங்க. மொத்த ஃபேமலியும் பண்ணாங்க. மூணாவது என் அசிஸ்டெண்ட்ஸ். நான் ராஜாராணி முடிச்சுட்டு, அவங்களைக் கூப்டு சொன்னேன். ‘விஜய் சாருக்கு அடுத்து கதை பன்ணீட்டிருக்கேன். அவர் இப்ப ஜில்லா பண்ணீட்டிருக்கார். அதுமுடிச்சு, கத்தி முடிச்சு அதுக்கப்பறம்தான் நம்ம பண்றதா இருக்கும். எப்படியும் ரெண்டு வருஷம் ஆகும். நான் என் வெற்றிக்காக காத்திருந்து பண்றது நியாயம். நீங்கள்லாம் ஓடிட்டிருக்கற குதிரை. வேற யார்கிட்டயாச்சும் போய் வேலை செய்ஞ்சுட்டு வாங்க’ன்னேன். ‘இல்ல சார்.. நாம பண்லாம்’ன்னாங்க. அவங்களுக்கும் நன்றி.

அப்பறம் பிள்ளையார் சுழி போட்டது விஜய் அண்ணன் சொன்ன ‘யெஸ்’. அவரும், ‘அட்லீ, முருகதாஸ் படம் முடிச்சுட்டு இன்னொரு கமிட்மெண்ட் இருக்கு. அத முடிச்சுட்டுதான் நான் வருவேன். நீங்க நடுவுல வேற ஒரு படம் பண்ணிட்டு வாங்களேன்’னார். ‘தேவையே இல்லைண்ணா.. இதுக்காகத்தான் வெய்ட் பண்ணினேன். பொறுமையா பண்லாம்’னுட்டேன். ஆக, இது காத்திருந்து எடுத்த முடிவு. அவருக்கும் நன்றி.

இதையெல்லாம் தாண்டி.. முக்கியமா.. எதாச்சும் முக்கியமான வேலையா நாம போறப்ப யாராச்சும் தம்ஸ் அப் காமிப்பாங்க. இப்ப நாம எக்ஸாம் ஹாலுக்கு போறப்ப யாராச்சும் நம்ம ஃப்ரெண்ட் கூப்டு ‘மச்சான் கலக்கீடு’ம்பான். இல்ல, அம்மாவோ, அப்பாவோ நல்லா எழுதுடா’ன்னு ஒரு விஷ் பண்ணுவாங்க. அதே மாதிரி விஜய் சார் ஆஃபீஸ்க்கு உள்ள, அவருக்கு கதை சொல்ல போறப்ப வெளில சங்கீதாக்கா இருந்தாங்க. அவங்களுக்கு ராஜாராணி ரொம்பப் பிடிக்கும். சைலண்டா தம்ஸ் அப் காமிச்சு, ‘வெல்டன்.. எப்படியாச்சும் ஓகே வாங்கிடுங்க’ன்னாங்க. அங்கயே பாஸிடிவ் எனர்ஜி தொடங்கிடுச்சு.

இந்தப் படத்துல விஜய் -சமந்தா, விஜய்-எமி ஜாக்சன் கெமிஸ்ட்ரியை விட, எனக்கும் விஜய் அண்ணாக்கும் நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சு. ஒரு செல்வராகவன் - தனுஷ், ராஜா - ஜெயம் ரவி செட் மாதிரி எனக்கும் அவருக்குமான உறவு இருந்தது. எனக்கென்ன வேணுமோ அதை தைரியமா சொல்லுவேன், அவரும் என் தோளத் தட்டி, ‘வொர்க் அவுட் ஆகலைன்னா சொல்லு’ன்னு எனக்கு வேணும்கற மாதிரி செட்ல ஒத்துழைப்பு குடுத்தார். அதுதான் படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போச்சு.

இதுல எனக்குப் பிடிச்ச ரொமாண்டிக் விஜய், உங்களுக்குப் பிடிச்ச ஒரு மாஸ் விஜய், அவருக்கான வட்டத்துக்கு மட்டுமே தெரிஞ்ச விஜய்னு மூணு விஜயைப் பார்க்கப் போறீங்க.

சமந்தா. என் தம்பின்னு சொல்லுவேன். அவ்ளோ ஃப்ரெண்ட் எனக்கு. ராஜாராணி நயன்தாரா எப்படியோ அப்படி சம்ந்தாவுக்கு இந்த மித்ரா ரோல். அப்பறம் எமி ஜாக்சன். அவங்க பேசறதும் எனக்கும் நான் பேசறது அவங்களுக்கும் சில சமயம் புரியாது. ஆனா என்ன தேவையோ அதை ஸ்பாட்ல கொண்டுவந்துடுவாங்க. அதுதானே ஒரு டைரக்டருக்கு வேணும்!

பிரபு சார்! இவர் ஷூட்டிங் வந்தா, ஏதோ ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வந்தமாதிரி இருக்கும். ஒரு பெரிய கேரியரோட வருவார். ‘வாங்க அட்லி.. சாப்பிடுவோம்’ன்னு மொதல்ல நம்மளை சாப்பாடு போட்டு திருப்திப்படுத்திட்டுதான் காட்சி என்னான்னே கேப்பார். தாய்க்கு அப்பறம் பிரபுசாரைத் தான் அப்டி உணர்ந்தேன். அவரோட பெர்ஃபார்மென்ஸ் பத்திலாம் சொல்லத் தேவையில்ல. ராதிகா மேடமும் ஒரு ரோல் பண்ணீருக்காங்க. நானும் எங்கம்மாவும் எப்படி கலாய்ச்சுக்குவோமோ அப்டியான ஒரு புரிதல் இருந்தது எனக்கும் அவங்களுக்கும்.

இவங்களையெல்லாம் தாண்டி, விஜய் சாருக்கு சமமா ஒரு கேரக்டர். குழந்தை கேரக்டர். ஆனா பெரிய பெரிய டயலாக்ஸ். நாப்பது சீனுக்கு மேல விஜய் சார்கூடவே நடிக்கணும். நாலைஞ்சு மாசம் அலைஞ்சும் யாருமே கிடைக்கல. ஒருநாள் ப்ரியா ஒரு ஃபோட்டோ காட்டி, ‘இந்தக் குழந்தை எப்படி இருக்கு?’ன்னு கேட்டாங்க. ‘மீனா மேடம் சின்ன வயசு ஃபோட்டோவா?’ன்னு கேட்டேன். அப்பறம்தான் அவங்க பொண்ணு நைனிகான்னு தெரிஞ்சது.

நைனிகா ஷூட்டிங் வந்தாலே, விஜய் சார் மொதக்கொண்டு எல்லாருக்கும் டென்ஷன்தான். ரெண்டுமூணு டேக் போனப்பறம், ‘ஐ’ம் ஃபீலிங் ஸ்லீப்பி’ன்னு போய்டுவா. போய் தாஜா பண்ணிக் கூட்டிட்டு வந்தா, ஒரு டேக்ல முடிச்சுடுவா.


ஜீவி ப்ரகாஷ். என் நண்பன். என் அம்பதாவது படம் உன்கூடத்தாண்டான்னு சொன்னான். விஜய் சார்னு தெரிஞ்செல்லாம் அவன் சொல்லல. அவனுக்கும் நன்றி. பாட்டெல்லாம் தியேட்டர்ல தெறிக்கப்போவுது. ஜித்து ஜில்லாடில 40 செகண்ட் சிங்கிள் ஷாட்ல விஜய் சார் ஆடிருக்கார். அலறப்போகுது தியேட்டர்.

எல்லாத்துக்கும் மேல தாணு சார். இதோ, சத்யம்ல நாலு ஷோ கேன்சல் பண்ணி ஒரு விழா. நாம நெனைச்சாக்கூட பண்ண முடியாது. நான் பத்து காருக்கு லிஸ்ட் குடுத்தா அவர்கிட்ட இருந்து ஃபோன் வரும். பயந்துட்டே எடுத்தா,  ‘என்னய்யா..  வெறும் பத்துதானா? ஒரு அம்பது கார் போட்ரலாமா?’ன்னு கேப்பார். அவருக்கு பெரிய நன்றி.

தெறி இதைப் பத்தின படம்.. அதைப் பத்தின படம், அப்படி ஓடும்.. இப்படி ஓடும்னெல்லாம் சொல்றாங்க. ஒரு இயக்குநரா நான் இப்ப சொல்லலாம்னு நெனைக்கறேன். தெறில நான் என்ன சொல்ல வர்றேன்னா.. இது எந்த அரசியல் சார்ந்த படமும் அல்ல. யாரையும் குறிப்பிட்ட படமும் அல்ல. அடிப்படையா நான் யோசிச்சது என்னன்னா, கொள்ளை அடிக்கறவன், கொல பண்றவன், ரேப் பண்றவன், குடிகாரன் செய்ன் அடிக்கறவன்னு எந்தத் தப்ப பண்றவனா இருந்தாலும் அவன் யாரோ ஒருத்தரோட புள்ளையாத்தான் இருப்பான். ஒழுங்கா நம்ம புள்ளைய வளர்க்கலைன்னா, நாடு நாசமாத்தான் போகும். கீழதான் போய்ட்டே இருக்கும். அவனைத் திருத்துவோம், இவனைத் திருத்துவோம்னெல்லாம் இல்லாம, நம்ம புள்ளைய நல்லா வளர்த்துவோம். அதை சொல்றதுதான் தெறி. Its about a Good Father. ஒரு நல்ல தந்தையா இருந்தாலே நாட்டை எங்கயோ கொண்டு போலாம். இதத்தான் நான் சொல்ல நினைக்கறேன். அதுதான் ‘தெறி’.

எல்லாருக்கும் நன்றி”

-சத்ரியன்

புகைப்படம்: ப. சரவணகுமார்

 

தொடர்புடைய பதிவுகள்:-

’கெட்டபய சார் இந்த அட்லி’ - இயக்குநர் மகேந்திரன் புகழாரம்

விஜய் சொன்ன குட்டிக்கதை - தெறி’யில் ஃப்ரீ அட்வைஸ்

.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்