தீராத 'பீப்' பாடல் சர்ச்சை- நீதிமன்றத்தில் ஆஜராக அனிருத்துக்கு மீண்டும் சம்மன்!

பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் 'பீப்'  பாடல் வெளியிடப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் இசையமைப்பாளர் அனிருத் கோவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அனிருத், நடிகர் சிம்பு ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் கொங்குநாடு அருந்ததி பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் சிவாஜி ஆகியோர் சார்பில், கோவை 2 வது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில்,நேற்று(திங்கள்) இந்த வழக்கு நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிம்பு சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான ஆணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்று இருப்பதாகக்  கூறி, அதற்கான  ஆணையை சமர்ப்பித்தார். அதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

பீப் பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் சம்மனை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் கோவை நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் இசையமைப்பாளர் அனிருத் நேரில் ஆஜராக வேண்டும் என்று  மீண்டும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் மே மாதம் 12ம் தேதிக்கு  தள்ளி வைத்தும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!