Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் டிவி செய்த தவறுக்கு நாமே பொறுப்பு - ஒரு ரசிகரின் சுயவிமர்சனம்

விஜய் டிவியின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்ற டாக் லைனுடன் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர். அதுவே ஜூனியர் எனில் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்பதாக இருக்கும். மக்களின் ஏகோபித்த வரவேற்புகளைப் பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளது.

சரி., டிவி சேனல்கள் மட்டும் தான் தவறுகள் செய்கிறதா? கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பார்வையாளர்களான நாமும் தவறுகள் செய்கிறோம். ரியாலிட்டி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை நம் அங்கீகாரம் இரண்டு கேட்டகரிகளுக்குத்தான். ஒன்று அழகாக இருக்க வேண்டும், அல்லது சேனல்கள் எதிர்பார்க்கும் சிம்பதி, அழுது புலம்புபவர்களாக இருக்க வேண்டும். இன்று ஆன்லைன் மற்றும் எஸ்.எம்.எஸ்களைப் பயன்படுத்துவோரில் முக்கால்வாசி இளைஞர்கள்தான் என்ற ரீதியில் அவர்கள் கண்களுக்கு அழகாகத் தென்படும் போட்டியாளர்களுக்குத் தான் அங்கீகாரம் முதலில்.

அழுது தீர்த்து, ஆஸ்கர் விருது வாங்கும் எஃபெட்டுகளைக் கொடுக்கும் போட்டியாளர்களுக்கு அடுத்த அங்கீகாரம். திறமை மூன்றாம் பட்சம் தான். அப்படி இருக்கும் போது சேனல்களை மட்டுமே குறை சொல்வது என்ன நியாயம்?

எல்லாம் சரி ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் என முகநூலில் கொஞ்சம் தேடினால் சுமாராக 6க்கும் மேற்பட்ட ஃபேக் ஐடிக்கள் இருக்கின்றன. அவரைப் பிடிக்காமல் தான் இத்தனை முகநூல் பக்கங்களா, இதே போல் நாம் ஏன் ஃபரிதாவுக்கோ, அல்லது ராஜகணபதிக்கோ பக்கங்கள் ஏற்படுத்தவில்லை. மேலும் லட்சுமிக்கு இங்கே 4க்கும் மேலான முகநூல் பக்கங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா மீடியாக்களும் தவறுகள் செய்கிறார்கள் தான். ஆனால் அதற்கு அடிப்படை பார்வையாளர்களான நாம்தான். நாம் எதை விரும்புகிறோம் எதை அதிகம் தேடுகிறோமோ அதற்குத் தான் அதிகம் இங்கே அங்கீகாரங்கள் கொடுக்கப்படுகின்றன.

நீங்கள் விவசாயம் குறித்தோ, அல்லது ஏழை மாணவன் சேம்பியனானது குறித்தோ பேசுவதில்லையே அல்லது ஒரு சின்ன இடத்தில் தானே பேசுகிறீர்கள் என கேட்கலாம். நயன்தாராவின் கிசுகிசுவுக்குக் கொடுக்கும் அங்கீகாரத்தை நாம் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிக்குத் தருகிறோமா?. மேலும் இதற்கு என்ன சாட்சி என்றால், முன்பு வேண்டுமானால் சாட்சி இல்லாமல் இருக்கலாம், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி வேறு. நாம் பயன்படுத்தும் ட்விட்டர், முக நூல் என கொடுக்கும் சாட்சிகள் தான் இதற்கு உதாரணம். #Theri #Vedhalam #HBDNayanthara #HBDKuttythala என ட்ரெண்டு உருவாக்கும் நாம் ஏன் விவசாயிகளுக்கான கொடுமைகள் குறித்து ட்ரெண்டை உருவாக்கவில்லை. ஏனெனில் நமக்கும் அது அவ்வளவு பெரிய விஷயமல்ல.

இதை முன்னிட்டே மீடியாக்களும், சரி மக்கள் இதைத் தானே அங்கீகரீக்கிறார்கள் இதைத் தானே தேடுகிறார்கள் என அவர்களும் விற்காத பொருட்களை மீண்டும் வாங்காத கடைக் காரர்கள் போல் சரியான அங்கீகாரங்கள் இல்லாத நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். உண்மையில் நாம் அங்கீகாரம் கொடுத்திருந்தால் பொதிகை சேனலின் வயலும் வாழ்வும் மிகப்பெரிய நிகழ்ச்சியாக உருவெடுத்திருக்கும். டிஆர்பியில் சக்கைப் போடு போட்டிருக்கும். இதை மறுக்க முடியுமா நம்மால்?

அப்படியெனில் சூப்பர் சிங்கரில் தவறு நடக்கவே இல்லையா? நிச்சயம் இருக்கிறது . அவர்கள் செய்த தவறுகள் இவை தான், போட்டியாளர்களுக்கான ஏவி எனப்படும் அறிமுக வீடியோக்களில் ஆனந்த், ஃபரிதா என அனைவரின் இசை வாழ்க்கை சாதனைகள் குறித்து பேசியிருக்க வேண்டும். நோ ரூல்ஸ் என இப்போது கூறுவோர் அப்போதே  சொல்லிவிட்டு செய்திருந்தால் பிரச்னை ஆகியிருக்க வாய்ப்பு இல்லை.ஸ்ரேயா கோஷல் போட்டிக்கு வந்தாலும் சரியென உண்மையில் இவர்கள் சேர்த்துக்கொள்வார்களா இல்லை ஜட்ஜாக பெரிய சோபா செட் கொடுத்து மரியாதை தருவார்களா? மேடைப்பேச்சுக்காகாவர்கள் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்பதெல்லாம் என்ன நியாயம். 

அடுத்து இறுதிப் போட்டியில் நீதிபதிகளின் சாய்ஸ் என்றால் என்ன? அதன் விபரங்கள் என்ன என்பதைச் சொல்லியிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் வாய்ப்பே இல்லாதவருக்கு ஒரு இசையமைப்பாளர் மேடையில் நான் வாய்ப்புத் தருகிறேன் எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே ஒரு பத்துப் பாடல்கள் பாடியவருக்கு சந்தோஷ் நாராயணன் தெரிந்தே வாய்ப்புக் கொடுத்தாரா அல்லது சேனல் ஆனந்த் குறித்த விபரங்களை சந்தோஷிடம் சொல்லாமல் மறைத்துவிட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.

வாக்காளர் ஓட்டுகள் தான் முக்கியம் எனில் அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும், நீதிபதிகள் கருத்துதான் மதிப்பெண்கள் எனில் அதை மட்டுமே வைத்திருக்க வேண்டும். 

என்ன ஆனாலும் சரி, அடுத்தமுறை எங்களை ஓட்டுப் போடச் சொல்லி நச்சரிக்காதீர்கள் ப்ளீஸ்.

 

- நானும் ஒரு பார்வையாளர்-

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?