'அம்மா தியேட்டர்' என்ன ஆனது? #ammatheatre

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் வரிசையில் சென்னையில் குறைந்த கட்டணத்தில் 'அம்மா தியேட்டர்' அமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் சைதை.துரைசாமி அறிவித்து ஓராண்டுக்கும் மேல் ஆகிறது.

சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டை பிப்ரவரி 19-ம் தேதி, வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சே.சந்தானம் தாக்கல் செய்தார். ''சென்னையில் அம்மா தியேட்டர்கள் அமைக்கப்படும். குளிர்சாதன வசதி, நவீன டெக்னாலஜியுடன் கூடிய சவுண்ட் சிஸ்டத்துடனும் தியேட்டர் உருவாக்கப்படும். இங்கு புதிய படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும். கட்டணம் மிகக் குறைவாக இருக்கும்" என 'ஆஹா ஓஹோ' அம்சங்களுடன் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

மேயர் சைதை.துரைசாமி, “சென்னையில் பெரும்பாலான தியேட்டர்கள் வணிக வளாகங்களாக மாறி அதிகக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். எனவேதான், ஏழை எளிய மக்களுக்காகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் அம்மா தியேட்டர்கள் அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

அப்போதைய கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில் அதிகாரிகள் டீம் உடனே ஸ்பாட் விசிட் அடித்து இடங்களை ஆய்வும் செய்தனர். மொத்தம் 15 இடங்களை ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்தனர். இதில், தி.நகர், கோடம்பாக்கம், தங்கசாலை, புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ், கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் 'அம்மா தியேட்டரு'க்கு அரசின் அனுமதிவேண்டி, திட்டம் தயாரித்து அனுப்பிவைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி. பிறகு என்ன ஆனது, 'அம்மா திரையரங்கம்?!'.

சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "வெறும் அறிவிப்புகளை வெளியிடுவதில் சைதை.துரைசாமி கில்லாடி. வாய்ச்சவடால் விடுவதிலேயே காலத்தைக் கடத்தி வருகிறார். துப்புரவுப் பணிகளில் அக்கறை காட்டாமல் ஜெயலலிதாவைக் குளிர வைக்க 'அம்மா தியேட்டர்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். முதலில் 7 தியேட்டர் என்றார். அதன்பிறகு மண்டலத்துக்கு தலா ஒரு தியேட்டர் என 15 தியேட்டர் அறிவித்தார். ஓராண்டில் கட்டி முடித்துவிடுவோம் என்று சொன்னார். 2014 பட்ஜெட்டில் அறிவித்த திட்டம் இது... இதுவரையிலும் இடத்தைக் கூடக் கையகப்படுத்தவில்லை. அம்மா தியேட்டர் திட்டம் எல்லாம் சும்மா தான். சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 15 ரூபாய் செடியை நடுவதற்குக்கூட  150 ரூபாய்க்கு ஜெயலலிதா படம் வைக்கும் நிலை உள்ளது" என்றார்.

அம்மா தியேட்டர் கட்ட தேர்வாகியுள்ள இடங்களை நேரில் சென்று பார்த்தோம். தி.நகரில்  தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இப்போது  மாநகராட்சி அலுவலகம் ஒன்று உள்ளது. இதனை 1998-ம் ஆண்டு அப்போதைய மேயர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த வளாகத்திற்கு உள்ளேயே தி.நகர் எம்.எல்.ஏ அலுவலகம், தீயணைப்பு அலுவலகங்கள் செயல்படுகிறது.

கோடம்பாக்கம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், அம்மா தியேட்டர் வரவிருக்கும் இடத்ததில் கொட்டி, பெருங்குடி குப்பை மேட்டுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. புளியந்தோப்பு  மாநகராட்சி பழைய அலுவலகத்தில் அம்மா உணவகம், அரசு இ-சேவை மையம், மாநகராட்சி நலவாழ்வு மையம், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. வள்ளலார் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் காலியாகவே இருக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் 'அம்மா தியேட்டர்' வருவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை!

'அம்மா தியேட்டர்' குறித்து மேயர் சைதை.துரைசாமியிடம் கேட்டோம். ''இந்தத் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி பில்டிங்ஸ் செயற்பொறியாளர் முருகனிடம் விபரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்று அவரின் செல்போன் எண்ணையும் கொடுத்தார். நாம் அவரைத் தொடர்பு கொண்டோம். மாநகராட்சி பில்டிங்ஸ் செயற்பொறியாளர் முருகன், ''இடங்களை ஆய்வு செய்து தியேட்டர் அமைக்கும் சாத்தியக்கூறுகளை உறுதி செய்துதான் 'அம்மா தியேட்டர்' திட்டம் உருவாகியிருக்கிறது. முதலில் 7 இடங்களில் தியேட்டர் அமைக்கும் சாத்தியக்கூறுகளை  கன்சல்டன்சி மூலம் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரையரங்கம், ஷாப்பிங், பார்க்கிங் வசதிகளை அமைத்தல்... என்று வாடிக்கையாளர்களைக் கவர என்னென்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் அந்த கன்சல்டன்சி ஆலோசனையாக வழங்கும். அதன் அடிப்படையில் இத்திட்டம் கொண்டு வரப்படும்" என்று சொன்னார்.

ஆக, தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது அம்மா தியேட்டர்!

- எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.மகேஷ்,

படங்கள் : ப.சரவணக்குமார், மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!