'பாண்டவர் அணி'க்கு என்ன பிரச்னை? - முழுவிபரம்!

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் தற்போது 'பாண்டவர் அணி'யின் கையில் உள்ளது. நடிகர் சங்கத் தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும், துணைத் தலைவராக பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில் சங்கத்தின் முதல் பொதுக்குழு சென்னையில் நடந்த போது நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன்விளைவால், துணைத் தலைவரான பொன்வண்ணன் தன் பதவியை ராஜினாமா செய்ய முயல... நாசர் சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியானது. பொன்வண்ணன் ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன பிரச்னை? என கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் போது அ.தி.மு.க கூட்டணியிலிருந்த சரத்குமாருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை ஜெயலலிதா. அதோடு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ், பாண்டவர் அணிக்குத் தீயாய் வேலைப் பார்த்ததால் அந்த அணி வெற்றிப் பெற்றது. இது சரத்குமார் தரப்புக்கு வருத்தம். சரத்குமாரைத் தோற்கடிப்பதில் ஜே.கே.ரித்தீஷூக்கு இருந்த இந்த ஈடுபாடு, சரத்குமார் அ.தி.மு.க-வை விட்டு வெளியேற முடிவெடுத்ததில் ஒரு காரணம். இப்போது மீண்டும் சரத்குமார் அ.தி.மு.கவில் சேர்ந்துவிட்டர் என்பது தனிக்கதை! இந்தப் பிரச்னைக்கு வருவோம்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நடந்த போது, நடிகர் சங்கத் தேர்தலில் 'பாண்டவர் அணி' வெற்றிக்காகப் பல்வேறு வகைகளில் உதவியாக இருந்த ஒரு தொழிலதிபரும் வந்திருக்கிறார். அவரைக் குறிப்பிட்டு சங்க உறுப்பினர்கள் இல்லாதவர்கள் பொதுகுழுவுக்கு வர அனுமதியில்லை என்று குழுவினர் சொன்னார்கள். இதனால் அவர் வருத்தத்துடன் வெளியேறினார். இதன்பிறகு நடந்த பொதுக்குழு கூட்ட மேடைக்கு ரித்தீஷ் அழைக்கப்படவில்லை என்று அவரது நண்பரும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த மற்றொரு நடிகருமான விஜய்கார்த்திக் பொதுக்குழுவிலேயே கடும் கோபப்பட்டார். இதை 'பாண்டவர் அணி'யில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கண்டும் காணாமல் இருந்தனர்.

பொதுக்குழுவை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பொன்வண்ணனிடமும் இந்த தகவல் சொல்லப்பட்டது. ஆனால், அவரும் இதைப் பெரிதுபடுத்தவில்லை. இதற்கிடையில் நடிகர் விஜய்கார்த்திக்கு சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டமும் இருந்துள்ளது. அந்த அடையாள அட்டையை ரித்தீஷ் கையால் பெற வேண்டும் என்று விஜய்கார்த்திக் விரும்பினார். நிர்வாகிகள் அதற்கு எந்த வித ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் பொன்வண்ணன் மீது ரித்தீஷின் ஆதரவாளர்கள் கோபமடைந்தனர். இதுவே அவர் ராஜினாமா செய்யவும் காரணமாக மாறியது.

சங்கத்தின் கட்டிடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி விரைவில் நடத்தப்படவுள்ளது. இந்த சமயத்தில் பாண்டவர் அணியில் பிளவு என்று வெளியில் தெரிந்தால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிடும். எனவே அதை மூடிமறைத்து கிரிக்கெட் பணியில் பிஸியாகி விட்டனர் பாண்டவர் அணியின் முக்கிய நிர்வாகிகள்" என்றனர்.

- எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!