ஆசை நிறைவேறுமா? - எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதிமுக நடிகர்கள்

கோலிவுட்டுக்கும், கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்றைய நடிகர்கள் பலர் ஆட்சிப் பீடத்தில் அமர ஆசைப்பட்டு வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறி விட்டது. சட்டசபைக்குள் செல்ல தங்களுக்கும் என்றாவது ஒருநாள் வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆசையில் பல நடிகர்கள், நடிகைகள் பயணிக்கின்றனர்.

வருகிற தேர்தலில் அ.தி.மு.க-சார்பில் தேர்தலில் போட்டியிட மனு கொடுத்து காத்திருக்கின்றனர் ஏராளமான நடிகர், நடிகைகள். நடிகர் செந்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இந்தமுறை அவருக்கு எம்.எல்.ஏ ஆசை வந்து விட்டது. சென்னையில் அவர் குடியிருக்கும் விருகம்பாக்கம் தொகுதிக்கும், பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கும் சீட் கேட்டு விருப்ப மனு போட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கு சீட் கேட்டுள்ளார் சிங்கமுத்து. மற்ற நடிகர்களான ஜே.கே.ரித்தீஷ் - கொளத்தூர், குண்டு கல்யாணம் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சி.ஆர்.சரஸ்வதி - மயிலாப்பூர், விஜய் கார்த்திக் - விருகம்பாக்கம், தியாகு - தஞ்சை, சரவணன் - சேலம், மனோபாலா - ஆர்.கே.நகர், பாத்திமாபாபு -ஆயிரம்விளக்கு, ராமராஜன் - மதுரை, அஜய்ரத்னம் - அண்ணாநகர் என அவர்களுக்குச் சாதகமான இடங்களை டிக் செய்திருக்கிறார்கள்.

இவர்களைத்தவிர, பொன்னம்பலம், குயிலி, நிர்மலா பெரியசாமி, வாசுகி, ஜெயகோவிந்தன் ஆகியோரும் ஜெயலலிதாவின் நேர்காணலுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு தேர்தலில் நிற்க சீட் கிடைத்தால் தொகுதியைச் சுற்றி வருவார்கள். இல்லையென்றாலும், தமிழகத்தைச் சுற்றி வர ரெடியாக இருக்கிறார்கள்.

நடிகர் செந்தில், ''இந்த தேர்தலிலும் அம்மாதான் ஜெயிப்பார்கள். நான், ரெண்டு தொகுதிக்கு பணம் கட்டி இருக்கேன். அம்மா மனசு வெச்சா, அம்மா பெயரைச்சொல்லிச் சொல்லியே பிரசாரம் செய்து ஜெயிப்பேன்'' என்று சொல்கிறார்.  அனிதா குப்புசாமி, ''நான் மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிப்பதால் அந்த தொகுதிக்கு விருப்பமனு கொடுத்துள்ளேன். ஆனால், அம்மா நிற்க சொன்னா எந்தத் தொகுதியிலும் நிற்பேன்" என்றார்.  நிர்மலா பெரியசாமி, ''கருர்  தொகுதிக்கும் வேளச்சேரி தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்துள்ளேன். மீண்டும் முதல்வராக அமர்வார். அவரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்'' என்று சொல்கிறார். நடிகர் பொன்னம்பலம், ''விருகம்பாக்கம் தொகுதியை எதிர்பார்த்து  விருப்ப மனு கொடுத்துள்ளேன். அம்மா உத்தரவுப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்தேன். இந்த தடவையும் அம்மா பிறப்பிக்கும் எந்த உத்தரவுக்கும் கட்டுப்பட்டு நடக்கக் காத்திருக்கிறேன்" என்று  நம்பிக்கையோடு முடித்தார்.

சீட் கொடுப்பாரா ஜெயலலிதா?

- எஸ்.முத்துகிருஷ்ணன், சி.ஆனந்தகுமார், எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!