வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (07/04/2016)

கடைசி தொடர்பு:12:55 (07/04/2016)

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு!

நடிகர்சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக “நட்சத்திர கிரிக்கெட் போட்டி” வரும் 17ம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் கொடுத்த மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அம்மனுவில் கூறியிருப்பதாவது,

சென்னை சேப்பாக்கத்தில் 17-ந் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. அதை டி.வி. சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யும். அன்று விடுமுறை நாள் என்பதால் அனைத்து மக்களும் அதைக் கண்டு ரசிப்பார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி வேட்பாளர்கள் ஓட்டுக்காகப் பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளது. கடந்த தேர்தல்களில் மின்சாரத்தை நிறுத்தி பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கும்போதும் அப்படி நடக்க வாய்ப்புள்ளது.

எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டியை தடுத்து நிறுத்திடவேண்டும். தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், 17-ந் தேதி நட்சத்திர கிரிக்கெட் நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் முன்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மட்டுமல்லாது, மக்களுமே பெரும் கோபத்தில் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமுகவலைதளங்களில் பலரும் நட்சத்திர கிரிக்கெட்டிற்கு எதிர்காகவே கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அக்கருத்துகளின் சாராம்ஸம் இதுவே,

* நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு, பொதுமக்களான நாங்கள் ஏன் பணம் தரவேண்டும்? என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது.

* தமிழகத்திலேயே தனிமனிதன் அதிகமாக சம்பாதிப்பது என்றால் சினிமாத்துறையில் உள்ள நடிகர் நடிகைகள் தான், இவர்களே பணம் இல்லையென்று நிகழ்ச்சி நடத்தி, சாதாரண மக்களிடம் பணம் பறிக்க வேண்டுமா?

* கலைத்துறை, கலைநிகழ்ச்சிகளைத் தாண்டி, கிரிக்கெட்டிற்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பது, ரசிகர்களுக்கு தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும்.

இவ்வாறு பல்வேறு கருத்துகள் மக்கள் தெரிவித்துவருகின்றனர். இதற்குநடுவே, நட்சத்திர கிரிக்கெட் விழாவை அஜித்தும், சிம்புவும் புறக்கணித்துவருதகாவும் சொல்லப்படுகிறது. நடிகர் சங்கத்திற்குள்ளேயே இவ்வாறான முரண்பாடுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது அரசு நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரிடம் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மக்களின் கருத்தும் வலுத்துவரும் நிலையில், தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியின் முடிவை ஒட்டியே கிரிக்கெட் நடக்குமா? தள்ளிப் போகுமா? என்பது முடிவாகும் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்