நடிகர்கள் சொந்தச் செலவுக்காக கிரிக்கெட் ஆடவில்லை - அஜித்தைத் தாக்கும் காரசாரக் கடிதம்

 

 நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் நடத்துவதாக அறிவித்ததிலிருந்து அதை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்படத்துறையிலிருந்தே நடிகர் அஜீத் மற்றும் சிம்பு ஆகியோர் இதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு நடிகர்களின் ரசிகர்களும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லி வருகிறார்களாம். இதனால், நடிகர் சங்க ஆதரவாளர்கள், அஜீத்தை மறைமுகமாக அதேசமயம் மிகக் கடுமையாகச் சாடி ஒரு கடிதத்தை சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு...... நடிகர் சங்கமும், நட்சத்திர கிரிக்கெட்டும் வணக்கம்: ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் POST PAID ,PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இதை நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியைக் காட்டவும், பொதுக் குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களைக் கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத் துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களையும் முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே.நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப் படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குக்கூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும். தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம்.

அவர்களை வருந்தச் செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும், அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர்..அவர்களுக்கு அடுத்தவர்களை குறை கூறவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை. சில நடிகர்கள், நடிகர் சங்கக் கட்டிடம் நடிகர்களின் சொந்தச் செலவில் கட்டப்படவேண்டும் மக்களைச் சுரண்டக் கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்.

அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப் படக்கூடாது என்று நினைத்தால் இலவசமாகப் படம் நடித்து திரையிட வேண்டியது தானே? இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத் தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாற்றுவார்களா? தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும்? சினிமா என்பது ஒரு பொழுது போக்கு? அவர்கள் அவர்களது, திரைக் குடும்பத் தேவைகளைச் சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும்.விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் முதலில் அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!