செங்கல்பட்டில் தெறி வெளியாகாதது ஏன்? தாணு குற்றச்சாட்டும் திரையரங்குத் தரப்பு பதிலும் | Why 75% of theaters in Chengalpattu area haven’t released Vijay’s Theri

வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (15/04/2016)

கடைசி தொடர்பு:16:35 (17/11/2017)

செங்கல்பட்டில் தெறி வெளியாகாதது ஏன்? தாணு குற்றச்சாட்டும் திரையரங்குத் தரப்பு பதிலும்

விஜய் நடிப்பில் உருவான தெறி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு பகுதியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.

செங்கல்பட்டு பகுதிகளில் படம் எதனால் வெளியாகவில்லை என்று படத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு விளக்கினார். 
அவர், “தெறி படம் செங்கல்பட்டு பகுதியில் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் செங்கல்பட்டு பகுதிக்கு ரிலீஸ் செய்ய கொடுத்திருந்தோம். அவர்களும் சரியான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அப்படியிருக்கும்போது சுமார் 75 சதவீத தியேட்டர்களில் (சுமார் 60 தியேட்டர்கள்) படம் வெளியாகவில்லை. விநியோகஸ்தர்கள் எதையோ எதிர்பார்த்து இப்படி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே செங்கல்பட்டு பகுதியில் பிரச்சனை இருந்தது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறோம். ஆனால், டெபாசிட், அட்வான்ஸ் என எதையும் தராமல் படத்தைத் திரையிட நினைக்கிறார்கள். அதனாலேயே இப்போது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இதுபற்றிக் கேட்டால்,

கடந்த 45 நாட்களாக வெளி வந்த எந்தப் படமும் இலாபகரமாக ஓடவில்லை என்பதுதான் உண்மை. வருமானம் இன்றி இருக்கும் தியேட்டர்காரர்கள் கூட விஐய் நடித்த ‘தெறி’ படத்தைப் போட மறுக்கவில்லை. செங்கல்பட்டு ஏரியாவில் இதுவரை எந்தப் படத்திற்கும் கேட்கப்படாத எம்.ஜி (மினிமம் கேரண்டி) தொகை கேட்கப்பட்டது.
டிக்கெட்டை அதிக விலைக்கு விற்றால்தான் தியேட்டர்காரர்கள் இந்தத் தொகையைத் திரும்ப எடுக்க முடியும். அரசின் ஆணையை மீறி சட்டவிரோதமாக டிக்கட் விற்ற குற்றத்துக்கு தியேட்டர்காரர்களும் ஆளாக நேரிடும்.

அட்வான்ஸ் கொடுத்து படம் போடவும், அரசு நிர்ணயித்த கட்டணம் அடிப்படையில் டிக்கட் விற்போம் என தியேட்டர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. விநியோகஸ்தரும், தயாரிப்பாளரும் இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் 70க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அரசின் உத்தரவுக்கு எதிராக செயல்பட விருப்பமின்றி ‘தெறி’ படத்தைத் திரையிடவில்லை.

தெறி படம் செங்கல்பட்டு ஏரியாவில் ரீலீஸ் ஆகாததற்கு தியேட்டர்கள் எந்த வகையிலும் காரணமில்லை,” என்கிறது தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பு.


டிரெண்டிங் @ விகடன்