ரஜினி கொடுத்த பணத்தைத் தரவில்லை - தெறி தயாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

விஜய்யின் தெறி படம் செங்கல்பட்டு பகுதியில் வெளியாகவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் டெபாசிட், அட்வான்ஸ் என்று எதுவும் தாராமல் படத்தைத் திரையிட நினைத்ததால் அங்கு படம் வெளியாகவில்லை என்று தாணு கூறியிருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் தாணுவின் குற்றச்சாட்டை மறுத்ததோடு அவர் மீதே குற்றம் சுமத்தினார். பன்னீர்செல்வம் மேலும் பேசும்போது,

“செங்கல்பட்டு பகுதியில் ஒவ்வொரு திரையரங்கமும் இவ்வளவு தொகையை மினமம் கியாரண்டியாகத் தரவேண்டும் என்று பட்டியல் போட்டு வைத்திருந்தார்.அவர் போட்டு வைத்திருந்த பட்டியல்படி சுமார் இருபத்தியிரண்டு கோடி கொடுக்க வேண்டியிருந்தது. அவ்வளவு பணம் கொடுத்துப் படத்தைத் திரையிட்டால் எங்களுக்கு நட்டம்தான் ஏற்படும். எனவே விகிதாசார அடிப்படையில் படத்தைத் திரையிடக் கொடுங்கள் என்று நாங்கள் கேட்டோம். அவர் தரவில்லை இதனால்தான் படம் வெளியாகவில்லை. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களுக்கு எந்தச் சிக்கலும் வருவதில்லை தாணு மட்டும்தான் இந்தச்சிக்கலைச் செய்கிறார்”  என்றார்.

அதோடு, லிங்கா படத்திலேயே தமிழகம் முழுவதும் 38 கோடிவரை நட்டம் ஏற்பட்டது, ரஜினி தரப்பிலிருந்து அவர்கள் நட்டஈடாக பனிரெண்டரை கோடி கொடுத்தார்கள். அதிலேயே இன்னும் நான்கு கோடி ரூபாயைத் தராமல் தாணு இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்.

கோவையில் ஒரு திரையரங்கில் பாலிமர் சேனலின் செய்தியாளர்கள் படம் பார்க்கும்போது, வீடியோ எடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு எதிராகவும் அவர் பேசினார். ஒரு திரையரங்கிற்குள் அவ்வளவு பெரிய கேமராவை எடுத்துக்கொண்டு போய்ப் படம் பிடிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், கோவை பகுதியிலும் மினமம் கியாரண்டிக்கு எதிராக அங்குள்ள விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள் எனவே அவர்கள் மீது பழிச்சொல் ஏற்படுத்தவே இவ்வாறான ஒரு குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கிறார் என்றார். இவை அனைத்தையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொதுமேடையில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!