தெறி விவகாரம், ரஜினி, கமல், அஜீத் போன்றோர்களுக்கு எச்சரிக்கையா..? | Is Theri issue Alert for Rajini, Kamal, Ajith?

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (16/04/2016)

கடைசி தொடர்பு:12:55 (16/04/2016)

தெறி விவகாரம், ரஜினி, கமல், அஜீத் போன்றோர்களுக்கு எச்சரிக்கையா..?

 

செங்கல்பட்டு தவிர மற்ற எல்லா இடங்களிலும் தெறி வெளியாகிவிட்டது. விஜய் போன்ற ஒரு முன்னணி நடிகரின் படம் இப்படி ஒரு பகுதியில் வெளியாகமல் இருப்பது நிச்சயம் ஆச்சரியமான செய்திதான்.

படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ வசூலில் குறை வைக்காது என்று சொல்லக்கூடிய வகையில் சில நடிகர்களின் படங்கள் இருக்கும் அந்த நடிகர்கள் வரிசையில் விஜய் இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் படத்தைத் திரையிடமுடியாதென அறுபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உறுதியாக நின்றதெப்படி?

அதுபற்றி விசாரித்தால், இது ஒரேநாளில் நடந்த மாற்றம் இல்லை, ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பெரியநடிகர்களின் படங்கள் என்றாலே போட்டிபோட்டுக்கொண்டு திரையரங்குக்காரர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். அவுட்ரேட், மினிமம்கியாரண்டி, டிஸ்டிரிபியூசன் ஆகிய மூன்று வகைகளில் பட விநியோகங்கள் நடக்கும். 

அவற்றில் அவுட்ரேட் என்றால், ஒரு திரையரங்கில் இப்படத்தைத் திரையிட மொத்தமாக ஒரு தொகை கொடுத்து வாங்கிக்கொள்வது, பத்துஇலட்சம் கொடுத்து வாங்கிக்கொள்கிறார் என்றால் அதில் ஒரு இலட்சம்தான் வசூல் ஒன்பதுஇலட்சம் நட்டம் என்றாலும் அது வாங்கியவர் பொறுப்பு விற்றவரிடம் எதுவும் கேட்கமுடியாது. அதேபோல அந்தப்படம் ஐம்பதுஇலட்சம் வசூலிக்கிறது நாற்பதுஇலட்சம் இலாபம் என்றால் விற்றவர் இலாபத்தில் பங்கு கேட்கமுடியாது. 
 
இரண்டாவது மினிமம்கியாரண்டி, இதன்படி பத்துஇலட்சம் மினிமம்கியாரண்டி என்றால், பத்துஇலட்சத்தைத் தாண்டி படம் வசூல் செய்தால் அதில் விற்றவருக்கும் வாங்கியவருக்கும் பங்கு. பத்துஇலட்சம் வசூலாகிவிட்டால் வாங்கியவர் தப்பித்தார். அதற்குக்குறைவாக வசூல் செய்தால் வாங்கியவருக்கு ஏற்படுகிற நட்டம் அவரையே சாரும். 
 
மூன்றாவதாக டிஸ்டிரிபியூசன், இந்த முறை இருவருக்குமே பாதுகாப்பானது என்று சொல்வார்கள். படத்தைத் தன்னுடைய திரையரங்கில் திரையிடுவார், அது எவ்வளவு வசூல் செய்கிறதோ அதில் ஆளுக்கு ஒரு பங்கு. அந்தப்பங்கு என்பது ஐம்பதுக்கு ஐம்பதாக இருக்கலாம், அறுபதுக்கு நாற்பதாக இருக்கலாம் அல்லது எழுபத்தைந்து இருபத்தைந்தாக இருக்கலாம். 
 
இப்போது அவுட்ரேட் முறை சுத்தமாக இல்லை என்கிறார்கள். சின்ன படங்கள் எல்லாமே டிஸ்டிரிபியூசன் முறையில்தான் வெளியாகின்றன. விஜய், அஜீத் போன்ற பெரியநடிகர்களின் படங்கள்தாம் மினிமம்கியாரண்டி முறையில் விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் இந்த நடிகர்களின் படங்களுக்கு நிச்சயம் தொடக்கநாட்களில் நல்லகூட்டம் வரும் போட்ட பணத்தை அதில் எடுத்துவிடலாம் என்கிற கணக்கு. 
 
தெறி படத்தில் அந்தக்கணக்குப் பொய்த்துப்போயிருக்கிறது. விஜய் போன்ற பெரியநடிகரின் படத்துக்குக் கூட மினிமம்கியாரண்டி தரமுடியாது என்று திரையரங்குக்காரர்கள் சொல்லிவிட்டனர். இதற்குக் காரணம், அப்படத்துக்குச் சொல்லப்பட்ட மிக அதிகப்படியான விலைதான் என்று திரையரங்குக்காரர்கள் சொல்கிறார்கள். 
 
அவ்வளவு விலை கொடுத்து வாங்கினால் அந்தப்பணம் நிச்சயம் வசூலாகாது எங்களுக்கு நட்டமதான் என்று திரையரங்குக்காரர்கள் சொல்கிறார்கள். ஏற்கெனவே வெளியான ரஜினியின் லிங்கா உட்பட பல பெரியபடங்களில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டே அவர்கள் இமுமுடிவை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
 
இந்தப்படங்களின் விலை அதிகமாகச் சொல்லப்படுவது எதனால்? முதலில் பெரியநடிகர்களின் சம்பளம். முந்தைய படம் ஒடுகிறதோ இல்லையோ முந்தையசம்பளத்தைவிட சில கோடிகள் அதிகமாக அடுத்தபடத்துக்குக் கேட்கிறார்கள். அவர்கள் நடிக்கும் படம் என்பதால் படப்பிடிப்புச் செலவும் மிக அதிகம். பாடல்காட்சியில் நாயகன் நாயகி பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆடிப்பாடுவது, சண்டைக்காட்சிகளின் பிரமாண்டத்துக்காக ஏராளமாகப் பொருட்செலவு செயவ்தும், பெரியநடிகர்களை வைத்து தமிழகத்துக்குள் படப்பிடிப்பு நடத்துவது சிரமம் என்பதால் வெளிநாடு போவத் அல்லது சென்னைக்குள்ளேயே பெரும்பொருட்செலவில் செட் போடுவது என்று செலவுகள் எகிறும். இவையனைத்தும் விற்பனையில் எதிரொலிக்கும். 
 
இதுவரை புதுப்படம் வெளியிடுகிற அன்று திரையரங்குக்க்£ரர்கள் வாங்கிய விலை அதிகம் என்பதற்காகக் கொஞ்சம் தங்களுடைய இலாபம் என்பதற்காகக் கொஞ்சம் என்று டிக்கெட் விலையை உயர்த்தி விற்றுவிடுவார்கள். இம்முறை டிக்கெட் விலையை உயர்த்தி விற்பனை செய்யலாம் என்று அரசாங்கம் சார்பில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டது இவர்களுக்குப் பெரிய பின்னடைவாகிவிட்டது.
 
எனவேதான் விஜய் படமென்றால் பெரியவசூல் வரும் என்பதைத் தாண்டி அந்தப்படத்தை வாங்க திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் தயாரிப்புச் செலவைக் குறைக்கவேண்ய கட்டாயம் ஏற்படும். தயாரிப்புச் செலவில் பெரும்பகுதி நடிகர்களின் சம்பளம் என்பதால் அதைக் குறைத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும் என்று சொல்கிறார்கள். 
 
இது விஜய்க்கு மட்டுமல்ல ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட எல்லா முன்னணி நடிகர்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கை என்று சொல்கிறார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்