இதுதான் மணிரத்னத்தின் அடுத்தப் பட தலைப்பா? ரசிகர்களை குழப்பிய வினோத போஸ்டர்!

ஓ காதல் கண்மணி படத்தையடுத்து தனது அடுத்தப் படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் மணிரத்னம் . கார்த்தி நடிக்கும் இப்படத்தின் கதை, தீவிரவாதிகளை மையமாகக் கொண்டு ரோஜா பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் முன்பு கசிந்தன.

தற்போது  இப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் என இணையத்தில் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் போஸ்டரில் ஒற்றை ரோஜாவும், துப்பாக்கியும் ரத்தம் சிந்திய நிலையில் காட்சியளிக்க, குருதிப் பூக்கள் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டர் அதிகாரப்பூர்வ போஸ்டர் கிடையாது. படத்தை தயாரிக்கும் மெட்ராஸ் டாக்கீஸோ, அல்லது இசை உரிமம் பெற்ற சோனி நிறுவனமோ தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் இந்தப் போஸ்டரை வெளியிடவில்லை. மேலும் இந்தப் போஸ்டர் செம்ப்ரே என்னும் ஆங்கில புத்தகத்தின் அட்டைப்படம். சரியான அளவுகளோ, அதிகாரப்பூர்வ போஸ்டருக்குரிய வடிவங்களோ இல்லாமல் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேல் நாயகன் கார்த்தியின் பெயர் போஸ்டரில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் படத்திற்கு நெருங்கிய வட்டங்களில் விசாரித்ததில் இதுவரை எந்தப் போஸ்டரும்,தலைப்பும் வெளியிடவில்லை எனக் கூறினர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்கும் மேலும் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருப்பது படத்திற்கு போலியான போஸ்டர் உருவாக்கும் அளவிற்கு மாற்றியுள்ளது எனலாம். 

படக்குழு உண்மையான போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டால் மட்டுமே இதற்குத் தீர்வு. முன்பெல்லாம் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்குத் தான் ஃபேன்மேட் போஸ்டர்கள் சுற்றலில் இருக்கும், இப்போது மணிரத்னம் படத்திற்கும் ஆரம்பித்துள்ளனர். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது நாயகி தேர்வு நடந்து வருகிறது. சாய்பல்லவி இல்லை என உறுதியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!