நடிகர்கள் விளம்பரங்களில் நடித்தால் சிறையா? - ராதாரவி சிடுசிடு

பொதுமக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகர் ராதாரவியிடம் கேட்டோம். அவர் "நகைக்கடை, துணிக்கடை விளம்பரத்தில் நடிக்கத்தான் முடியும். அதற்காக அந்த துணிக்கடையில் உள்ள துணியை ஆராய்ந்து பார்த்தா விளம்பரத்தில் நடிக்க முடியும். ஒரு வேட்டி விளம்பரத்தில் நடிக்கிறோம். அந்த வேட்டி கிழிந்துவிட்டால், அதற்காக விளம்பரத்தில் நடிக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி. ஒரு நகைக் கடை விளம்பரத்தில் ஒரு நடிகர் நடிக்கிறார். ஆனால், செய்கூலி, சேதாரத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும் .

நான் வில்லன் நடிகர். எனக்கு பீடி, சிகரெட் மற்றும் மது தொடர்பான விளம்பரங்கள்தான் அதிகம் வந்தது. ஆனால், அதுதொடர்பான விளம்பரங்களை வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். நாங்கள் மதுவுக்கு ஆதரவாக நின்று 'மது அருந்துவது நல்லது' என்று விளம்பரத்தில் நடித்தோம் என்றால் அது தவறு. அதற்காக வேண்டுமானால் எங்களை கைது செய்யலாம். எங்களுக்கு பிழைப்பே நடிப்பதுதான். எங்களுக்கு ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் என்று சொன்னால் நடிக்க மட்டும்தான் தெரியும்.

அரசியல்வாதிகளுக்கு கிடையாதா..!

மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரத்தில் நடித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று சொல்கிறார்கள். அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருகிறார்களே அவங்களுக்கு என்னங்க தண்டனை. இப்போது தேர்தல் சமயம், அரசியல் கட்சிகளுக்காக நடிகர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேடையில் இந்த கட்சி, ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வார்கள், இதைச் செய்வார்கள் என்று சொல்லி வாக்காளர்களின் ஓட்டுகளை கவர்கிறார்கள். அதற்காக, அவர்கள் ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வந்து அளித்த வாக்குறுதிகளை செய்யவில்லை என்றால், அதற்காக நடிகர்களுக்கா சிறை தண்டனை வழங்குவார்கள்.

ஒரு விளம்பரத்தில் ஒரு பிரபலம் நடிக்கிறார் என்றால் அந்த விளம்பரத்தின் ஸ்க்ரிப்ட் ரைட்டர், இயக்குநர் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை தண்டிக்காமல், பிரபலங்களை மட்டும் ஏன் தண்டிக்க வேண்டும்? இந்தமாதிரியான பரிந்துரைகளே தவறு. நடைமுறையில் சாத்தியமாகாததை எல்லாம் சட்டமாகக் கொண்டு வரக்கூடாது. மக்களை ஏமாற்றும் வகையில் அமையும் விளம்பரங்களுக்கு அபராதமோ, சிறை தண்டனையோ விதிப்பது தவறு. மொத்தத்தில் இந்த பரிந்துரையே தவறு" என்றார்.

உங்கள் கருத்தையும் கீழே பதிவு செய்யலாமே!

சோ.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!