Published:Updated:

தமிழக சினிமாக்களில் முதல்முறையாக... யூ-டியூபிலேயே வெளியாகும் சினிமா!

Vikatan
தமிழக சினிமாக்களில் முதல்முறையாக... யூ-டியூபிலேயே வெளியாகும் சினிமா!
தமிழக சினிமாக்களில் முதல்முறையாக... யூ-டியூபிலேயே வெளியாகும் சினிமா!
தமிழக சினிமாக்களில் முதல்முறையாக... யூ-டியூபிலேயே வெளியாகும் சினிமா!

ஒரு வருடத்திற்கு அதிக திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.படம் எடுக்கப்பட்டு இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் படங்களுக்கு என்று ஒரு பட்டியலிட்டால் அதிலும் பெரும்பாலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம்முடைய கோலிவுட் திரையரங்குகளில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை மட்டும்தான் நமக்கு தெரியும்.ஆனால் வெளிவராமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அப்படியே பெட்டியில் முடங்கிப் போகும் படங்களின் எண்ணிக்கை ஏராளம்.சிறிய நட்சத்திரங்கள் தொடங்கி பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வரை எதுவும் இதற்கு விதிவிலக்கு இல்லை.வாலு,  பூலோகம், மதகஜராஜா, இடம் பொருள் ஏவல் என்று "காக்க வைக்கப்பட்ட, காத்துக்கொண்டிருக்கின்ற" படங்களின் எண்ணிக்கை நிறைய இருக்கிறது.பெரிய பட்ஜெட் படங்கள் கூட அதிக சிரமத்திற்கு பின் எப்படியோ பெட்டியில் இருந்து "விடுதலை" அடைந்துவிடும்.ஆனால்  ஸ்டார் வேல்யூ இல்லாமல், கதையை நம்பி எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படங்களின் நிலைமைதான் மோசம்.அப்படிப்பட்ட படங்களை திரைக்குக் கொண்டுவருவது என்பது கடைசிவரையில் இயலாத காரியம்தான்.அப்படிப்பட்ட ஒரு படம்தான் "ஐந்நூறும் ஐந்தும்".

"ஆக்சிசிபிள் ஹாரிசான் பிலிம்ஸ் (Accessible Horizon Films) " என்ற நிறுவனத்தால் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு கடந்து 2012ல் எடுத்துமுடிக்கப்பட்டது.அன்றிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக பல முயற்சிகளுக்கு பின்பும் திரைக்கு வராமல் முடங்கியே இருந்தது.பல்வேறு உலக சினிமா விழாக்களில் எல்லாம் திரையிடப்பட்டும் கூட தமிழகத்தில் வெளியிட முடியாததால் தற்போது அந்தப் படக்குழு படத்தை இலவசமாக யூடியூபில் வெளியிட முடிவு செய்திருக்கிறது.அந்தப் படத்தின் இயக்குநர் ஸ்டான்லின் ரகுவிடம் இதுகுறித்துப் பேசியபோது.

நேரடியா படத்தை யூ டியூப்ல வெளியிடப் போறீங்களா....?

ஆமாம்.கிட்டத்தட்ட இந்தப் படத்தை 2012 கடைசில எடுத்து முடிச்சோம்.இது ஆக்சிசிபிள் ஹாரிசான் பிலிம்ஸ் நிறுவனமும் அப்பறம் எங்க  நண்பர்களும் சேர்ந்து தயாரிச்ச படம்.கடந்த நாலு வருஷமா படத்தை பலவகையில திரைக்கு கொண்டு வர முயற்சி பண்ணிட்டோம் முடியல.இந்தப் படம் இப்படியே முடங்கிக் கிடக்குறதுல எங்களுக்கு விருப்பம் இல்லை.அதான் யூ டியூப்லயே நேரா வெளியிடலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.மே 1 அன்றைக்கு யூடியூப்ல ஆக்சிசிபிள் ஹாரிசான் பிலிம்ஸோட பேஜ்ல படத்தை வெளியிடலாம்னு இருக்கோம்.

இப்படி வெளியிடுறதால உங்களுக்கு நஷ்டம் இல்லையா.....?

பெரிய நஷ்டம்தான்.ஆனால் நாங்க படம் எடுத்தது மக்கள் பார்க்கணும்னு, யாருமே பார்க்காம பல வருஷமா அந்த படைப்பு சும்மா இருக்குறத பார்க்கும் போது கஷ்டமா இருந்தது.நிறைய நிறுவனங்கள் கிட்ட போய் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண கேட்டிருக்கோம்.ஆனா யாருமே  ஸ்டார் வேல்யூ இல்லாத படத்தை ரிலீஸ் பண்ண தயாரா இல்லை.வருடங்கள் வீணாய்ப் போனதுதான் மிச்சம்.ரொம்ப இறுக்கமான மனநிலைக்கு வந்த பின்தான் இந்த முடிவுக்கு வந்தோம்.

தமிழக சினிமாக்களில் முதல்முறையாக... யூ-டியூபிலேயே வெளியாகும் சினிமா!

எந்தெந்த நிறுவனங்களை எல்லாம் அணுகினீங்க....?

பெயர் சொல்ல விரும்பல, ஆனா கிட்டத்தட்ட எல்லா பெரிய பேனர் தொடங்கி சிறிய  பேனர்லயும் ரிலீஸ் பண்ணக் கேட்டோம்.யாருமே முன்வரல.எல்லாரும் ஸ்டார் வேல்யூ எதிர்பார்த்தாங்க.அப்பறம் எங்க படம் சில உலக சினிமா விழாக்கள்ல திரையிடத் தேர்வானது.அதுக்கு அப்பறம் இரண்டு நிறுவனங்கள் எங்க படத்தை வெளியிட முன்வந்தாங்க.பச் அதுவும் அப்பறம் முடியாம போயிட்டு.

என்ன மாதிரியான சினிமா விழாக்கள்ல படம் திரையிடப்பட்டது....?

ஜெர்மனில நடந்த ஸ்டுர்ட்கார்ட் உலக சினிமா விழால திரையிடப்பட்டது அப்பறம் கேரளால நடந்த உலக சினிமா விழாலயும் திரையிடப்பட்டது.இது இரண்டுக்கும் தேர்வான ஒரே தமிழ் சினிமா இந்தப் படம் மட்டும்தான்.நிறையப் பேர் பாராட்டுனாங்க.ஆனாலும் தமிழ் சினிமாவோட சூழ்நிலை அப்படி கடைசி வரைக்கும் ரிலீஸ் பண்ண முடியாமலே போய்டுச்சு.இதுல ரொம்ப பெரிய வருத்தம்தான்.பச் எப்படியோ மக்கள் பார்க்க போறாங்க படத்தை அதுபோதும்.

தமிழ்  சினிமாக்கள் சில காலமாக ஒவ்வொன்றிலும் இருக்கக்கூடிய சிஸ்டத்தைப் பற்றி பேசுகிறது.ஆனால் ஏனோ அது தன்னுடைய சிஸ்டத்தின் குறைகளைப் பற்றி பேசுவதே இல்லை.எத்தனை நல்ல படங்கள் தமிழில் வந்தாலும் புதிதாக ஒரு நல்ல படத்தைத் திரையிட வேண்டும் என்றால் அது இப்போதும் இயலாத காரியமாகத்தான் இருக்கிறது.இன்று இந்தப் படத்திற்கு நேர்ந்த அதே நிலைமை நாளை ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கு நேரலாம்......அதற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கோலிவுட் விழித்துக் கொள்ள வேண்டும்.

லோ.சியாம் சுந்தர் மாணவப் பத்திரிகையாளர்

Vikatan