சகாயம் ரசித்துப் பார்த்த டிரெய்லர்!

சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'இணைய தலைமுறை'  படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சகாயம் ஐ.ஏ.எஸ், சமுத்திரகனி, தங்கர் பச்சன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சகாயம், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைக் கூறி பேச ஆரம்பித்த போது கைதட்டல் ஓசைகள் நிற்காமல் ஒலித்துக்கொண்டே இருந்தன.

'நம் நம்பி இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் தேசத்தின் மேம்பாட்டிற்கு பாடுபடுவார்கள் என்று எண்ணி இவர்களுக்கு நாம் ஆதரவு தருகிறோம். ஆனால் அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் 2006ம் ஆண்டு தேர்தலில் கணினி துறையைச் சேர்ந்த சில இளைஞர்கள் அரசியலில் நின்றார்கள். அப்படித்தான் எனக்கு மாறனைத் தெரியும்’ என படத்தின் தயாரிப்பாளர் மாறனை நினைவுக் கூர்ந்து பேசத் துவங்கினார் சகாயம். ‘நம் சமூகத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நல்ல படைப்பாளிகள், கலைஞர்கள் என பலரும் இருக்கிறார்கள் ஆனால் நல்ல தலைவர்கள் இல்லையே என நான் நொந்துகொண்டிருந்தேன். அப்போது எழுந்த இளைஞர்கள் கூட்டம் தான் இந்த மாறனுடையது. மாணவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மாணவர்களிடம் குறும்பு இருக்கும்.

ஒரு ஆசிரியர் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டி லண்டனின் சென்று சட்டம் பயின்ற மனிதர் காந்தியடிகள். ஆனால் அவருடையக் கையெழுத்து அவ்வளவு நன்றாக இருக்காது. இதிலிருந்து என்ன தெரிகிறது எனக் கேட்க ஒரு மாணவன் சொன்னான் கையெழுத்து அழகாக இல்லாத மனிதர்கள் எல்லாம் மிகப்பெரிய தலைவர்களாக இருந்துள்ளார்கள் என்றான். அப்படி மாணவர்கள் குறும்புக்காரர்கள். ஆனால் அவர்களிடம் அளப்பறிய சக்தி இருக்கிறது.

நான் இந்தப் படம் பார்க்கவில்லை. ஆனால் கதை கேட்டேன். இந்தப் படம் மாணவர்களுக்குள் நடக்கும் தில்லுமுல்லு மட்டுமின்றி தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் கூறப்போகிறது. அப்படிதான் நான் சமுத்திரக் கனியின் அப்பா படத்தையும் நான் பார்த்தேன். கல்வி எப்படி வணிக வளமாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது. நம் கனவுகளை நம் பிள்ளைகளின் மீது திணிப்பதும், அப்படிப்பட்ட சூழலை மாற்றக்கூடிய படமாகவும், கல்வியை வணிகமாக இருக்கும் இக்கால நிலையை நான் ஆதரிக்க மாட்டேன் என்கிற வகையில் ’அப்பா’ படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.

நான் சமீபத்தில் அப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தேன். இவர்கள் எல்லாம் நம் கலைஞர்கள். தங்கர் பச்சான், நினைப்பதை அப்படியே பேசிவிடுவார். அதனால் சிலரின் கசப்புகளை எதிர்கொள்வார். நான் அதிகம் படம் பார்ப்பதில்லை. அழகி படம் பார்த்து நான் பிரமித்துப் போனேன். இதை விட அழகாக நம் மண்ணின் வாசனையை வெளிப்படுதும் படமில்லை. அரசியல் விழிப்புணர்வுப் படங்களை செல்வமணி எடுத்துள்ளார். இப்படிப்பட்ட கலைஞர்களை நாம் ஆதரிப்போம். எனக் கூறி சகாயம் பேசி முடித்தார்.

அப்பா டிரெய்லரைக் காண க்ளிக்கவும்

- ஷாலினி நியூட்டன் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!