வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (02/05/2016)

கடைசி தொடர்பு:13:18 (02/05/2016)

மே தின விழாவில் கமல் எழுப்பிய உரிமைக்குரல்

 

 உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில்   மேதினவிழா கொண்டாடப்பட்டது. இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அரங்கில்  இது நடந்தது. விழாவில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும் போது,

''இங்கே குழுமியிருக்கும் பெப்ஸி குடும்பத்தினரே, இங்கே மத்திய அமைச்சர் வந்திருக்கிறார். அவரிடம் இக்கட்டான நேரத்தில் கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள் . இது இக்கட்டான நேரமாக இருக்கலாம். ஆனால் வைக்கப்பட்டவை நியாயமான கோரிக்கைகள்தான்.  இப்போது வைக்கப்பட்ட து, சாதகமான அரசியல் சூழல் என்பதால் அல்ல. இவை பலநாள் காத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகள்தான்.  இந்த நேரத்தில் வைப்பது  அமைச்சர்  இங்கு வந்திருப்பதால் மட்டுமே.. அமைச்சர் அவர்களே நீங்கள் இந்தக் கோரிக்கைகளை என்று வேண்டுமானாலும் நிறைவேற்ற முடியும். தயவு செய்து நிறைவேற்ற செய்யுங்கள்.
 
இத்துடன் இன்னொரு கோரிக்கையையும் சேர்த்து வைக்கிறேன். அறிவுசார் சொத்துரிமையான 'இண்டலக்சுவல் பிராபர்டி ரைட்ஸை 'ப் பதிவு செய்ய டில்லி வரை  நாங்கள் போக வேண்டியிருக்கிறது. இங்கேயும் இண்டலக்சுவல் இருக்கிறார்கள்.இங்கேயும்  இண்டலக்சுவல் பிராபர்டி இருக்கிறது. அதற்கு இங்கேயே தனியாக ஒரு அலுவலகம் இருக்க வேண்டும். இதை என் கோரிக்கையாக அல்ல உரிமைக்குரலாக சொல்கிறேன்.
 
தொழிலாளர்களுக்கான தொழில்நுட்ப திறன் பயிற்சித்திட்டத்தை துரிதப்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது .  நான் இங்கே வந்திருபபது  எனக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்களால் அல்ல. என்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது என்னுள் இருக்கும் தொழிலாளி உழைப்பாளி என்பதுதான்.
 
நானும் ஒரு தொழிலாளிதான்.-கமல்ஹாசன் என்கிற நட்சத்திரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது கமல்ஹாசன் என்கிற தொழிலாளி மட்டும்தான். அதன்மூலம்தான் என் நிறுவனமே இயங்கி வருகிறது. நிமாய் கோஷ்  பற்றி  இங்கே அடிக்கடி பேசப்பட்டது.மகிழ்ச்சி. தேசிய கீதம் வேறு மாகாணத்திலிருந்து வந்தது போல் நிமாய் கோஷ்  தமிழில்கூட பேசத் தெரியாதவராக இருந்தாலும் வேறு மாகாணத்திலிருந்து  இங்கே  வந்து தொழிலாளர்களுக்காக உழைத்தவர். அவரைப் போல எம்.பி. சீனிவாசனையும் இங்கே நினைவு படுத்த வேண்டும் அவர்கள் எல்லாம் ஊக்குவித்த குருதிதான் இன்றும் எனக்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது.
 
உங்களில் என்னையும் ஒருவனாக பார்த்துக் கொண்டிருக்கீறீர்கள்  அதற்கு என் நன்றி . இது வாழ்த்து மேடை இல்லை என்றாலும்  இதைச் சொல்ல வேண்டும். நாங்கள் நாற்பது ஆண்டுகளாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால்  நாங்கள் செய்யத் தவறியதை விஷால்  குழுவினர் செய்து காட்டினார்கள். நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. நீங்கள் செய்தீர்கள்.எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது, ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ என விஷால்  குழுவினர்  இறங்கினார்கள். செய்து காட்டினார்கள். என்று கமல்ஹாசன் விஷாலைப் பாராட்டிப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்