வியன்னாவில் தத்தளித்த வித்யூலேகா...!

காமெடி நடிகையான வித்யூலேகாவின் பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆஸ்திரியாவில் திருடப்பட்டதால், ட்விட்டர் மூலம் உதவியை நாடியுள்ளார்.

நீதானே என்பொன்வசந்தம் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. பிறகு பல ஹிட் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் கலக்கிவருகிறார். சமீபத்தில் நண்பர்களுடன் ஆஸ்திரியா சென்றிருந்த போது பாஸ்போர்ட், மற்றும் முக்கிய ஆவணங்களை ஹோட்டல் வராண்டாவிலேயே திருடப்பட்டதால் தற்போது சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ,எனது   பாஸ்போர்ட், கார்ட், பணம் என அனைத்தும் அடங்கிய பேக் ஹோட்டல் வராண்டாவிலேயே திருடப்பட்டு விட்டது.

எவ்வளவு சீக்கிரம் முடியோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு இந்திய தூதரகத்துடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  சிசிடிவி கேமராவில் பதிவான விஷயங்களைக் காண எனக்கு அனுமதி இல்லை. ஆனால் ஆஸ்திரிய போலீஸார் பார்த்துள்ளனர். ஒரு மனிதர் என்னை திசைதிருப்ப வேண்டி ஒரு முகவரிக்கு எப்படிச் செல்ல வேண்டும் எனக் கேட்டான். நான் எனக்குத் தெரியாது எனக் கூறினேன். அவனது நண்பன் எனக்கு பின்னால் வந்து எனது பேக்கை எடுத்து விட்டான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தியத் தூதரகம் எனக்கு உதவும் என நம்புகிறேன். ஆஸ்திரிய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். நான் நாளை தூதரகத்திற்கு செல்லவிருக்கிறேன். நண்பர்களுடன் நினைத்து மகிழ வேண்டிய பயணமாக இருந்த இந்த ட்ரிப் தற்போது சோகமான முடிவாக அமைந்துள்ளது. பணம், பாஸ்போர்ட் என அனைத்தும் இழந்துவிட்டேன். என் விதி என நினைக்கிறேன்.

பிரதமரின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து உதவி கேட்டுள்ளார் வித்யூலேகா. தற்சமயம் குஷ்பூ உள்ளிட்டோர் ட்விட்டரில் வித்யூலேகாவுடன் தொடர்பிலேயே இருக்கிறார்கள். பல நண்பர்கள் அவருக்கு ஆறுதலும் கூறி வருகிறார்கள். ஒரு ஹோட்டல் வராண்டாவிலேயே இப்படி திருடப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!