ஹன்சிகா, தமன்னாவோடு நடித்தது எதனால்? சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் பதில் | Why I act With Hansika and Tamanna? saravana stores owner Answered

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (06/05/2016)

கடைசி தொடர்பு:20:44 (06/05/2016)

ஹன்சிகா, தமன்னாவோடு நடித்தது எதனால்? சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் பதில்

இரண்டு நாட்களாகவே ஒரு விளம்பரம் இணையத்தையும், தொலைக்காட்சிகளையும், தினமும் காலை செய்தித்தாள்களையும் பரபரக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சரவணா ஸ்டோரின் மற்றுமொரு கிளை சென்னை அண்ணா நகரில் தொடங்கவிருப்பதற்கான விளம்பரமே அது. அந்த விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னாவை விட நம்மை ஈர்த்த மற்றுமொரு நபர் தான் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் எஸ்.எஸ்.சரவணன்.

அதுமட்டுமின்றி இன்று காலை புதிய கிளையின் தொடக்கவிழாவிற்கு மாதவன், வைரமுத்து, ஜெயம்ரவி மற்றும் ஸ்ரேயா, ஹன்சிகா, தமன்னா வரவிருப்பதாக செய்திகளும் வெளியாக, நிச்சயம் சரவணா உரிமையாளரையும், நட்சத்திர பட்டாளங்களையும் சந்திக்க மக்களோடு மக்களாக அண்ணாநகரில் கலந்தோம்.

காலை எட்டுமணிக்கு அந்த ஏரியா மக்களின் பேச்சில், ஹன்சிகாவும், தமன்னாவும் தான். எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. வெள்ளைநிறத்தில் பிரம்மாண்டமாக ஏழு மாடி கட்டிடங்களுடன் எழுந்துநின்றது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்!

காலை ஒன்பது மணிக்கு, கட்டிடத்தை சுற்றி முழுவதும், ரசிகர்களின் கூட்டம் திரண்டது, ஒரு பக்கம் வரும் சிறப்புவிருந்தினரை வரவேற்றுக்கொண்டிருக்க, மறுபக்கம் கேரள பாரம்பரிய சண்ட மேளம் முழங்கிக்கொண்டிருந்தது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும், சுற்றிலும் கண்கவர் அலங்காரமும் என ரசிகர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

அந்த நேரத்தில், ஜவுளி கடைக்கு வெளியே உருவாக்கப்பட்டிருந்த மேடைக்கு ஒவ்வொரு நட்சத்திரமாக வர, கூட்டம் நெரிசலாக மாறியது. வைரமுத்து, ஹன்சிகா, தமன்னா, மாதவன் மற்றும் ஜெயம்ரவி என்று அனைவருமே அவருக்கான ஸ்டைலில் ரசிகர்களுடன் பேசியது ஹைலைட். ஸ்ரேயா மேடையில் ஒவ்வொரு முறை “ஐ லவ்யூ” என்று சொல்லும்போதும், கூட்டத்தில் மாட்டிக்கொண்ட என்னையும் நெரித்து எடுத்தனர் ரசிக கோடிகள். குறிப்பு: ஸ்ரேயா மூன்று முறை ஐலவ்யூ என்று ரசிகர்களைப் பார்த்து சொன்னார்.

 (கலர்ஃபுல் ஆல்பத்திற்கு படத்தின் மீது க்ளிக் செய்யவும்)

தொடர்ந்து அனைத்து நட்சத்திரங்களும் பேசிமுடிக்க, ரிப்பன் கட்செய்து ஜவுளிக் கடையும் திறப்புவிழா கண்டது. ஆனால் ரசிகர்களின் கூட்டம் மட்டும் குறையவேயில்லை. அக்னி வெயிலிலும் ரசிகர், தங்களுக்கு விருப்பமான நடிக, நடிகரை காண வந்திருந்தது, அவர்களின் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. நிகழ்ச்சியும் முழுமையாக நிறைவேற ரசிகர்களுக்கு விடைகொடுத்து பிரிந்தனர் நட்சத்திர பட்டாளங்கள்.

இறுதியாக, விளம்பரத்தில் நடித்து கெத்துகாட்டிய சரவணா உரிமையாளர் எஸ்.எஸ்.சரவணனிடம் பேசினோம்,

“நீங்களே ஏன் ஹன்சிகா, தமன்னாவோட நடிச்சீங்க?’’

“நான்தான் நடிக்கணும்னு எதுவும் பிளான் இல்லை. சும்மா நினைச்சோம்... செய்யலாம்னு. அதை செயல்படுத்திப் பார்த்தோம்... அவ்வளவுதான்!’’

“தொடர்ந்து உங்க விளம்பரத்தில் நீங்களே நடிப்பீங்களா?”

“இன்னும் முடிவுசெய்யவில்லை, பார்க்கலாம்” என்ற பதிலுடன் முடித்தார் சரவணன்.

நிகழ்ச்சியின் வீடியோவிற்கு:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்