நீதிமன்றங்கள் மீது விமர்சனம் எதனால்? - மனிதன் இயக்குநர் அகமது விளக்கம்!

ஃப்ளாட்ஃபார்மில் தூங்கும் மனிதர்களை சர்வ சாதாரணமாக குடிபோதையில் வாகனம் ஏற்றிக் கொல்வதும் பணம் இருந்தால் போதும், சாட்சிகளை விலைக்கு வாங்கி நீதியைக் கொல்வதும் என நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில உண்மைச் சம்பவங்களை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் ’மனிதன்’ திரைப்படத்தின் மூலம் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்   இயக்குநர் ஐ.அகமது.

நீதிமன்றங்களில் அனுபவக் குறைவான வழக்கறிஞர்கள் ஊறுகாய் விற்பதும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போதே நீதிபதி தனியார் வழக்கறிஞரிடம் தனக்கு தேவைப்படும் ரியல் எஸ்டேட் குறித்த விவரங்களை கேட்டுப் பெறுவதும், கோர்ட்டில் கூச்சல் குழப்பம் நிகழும் தருணத்தில் டவாலிக்குப்  பதில் நீதிபதி கோவமடைந்து சத்தம் போடுவதுமாக சில  காட்சிகள் இந்தப் படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் பலவும் நிஜத்துக்கு ஒத்து வராமல் சினிமாத்தனமாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்தியில் வெளியான ’ஜாலி எல் எல்பி’ திரைப்படத்தை ரீமேக் செய்து தமிழில்  எடுக்கப்பட்டிருக்கிறது மனிதன்  திரைப்படம்.

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி,பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ்,விவேக் என கதைக்குத் தேவையான நட்சத்திரங்களுடன் காண்ட்ரவர்சியைப் பற்றிக் கவலைப்படாமல்  களம் இறங்கியிருக்கும் இயக்குநர் ஐ.அகமதுவிடம் பேசினோம்.

‘’நல்ல படம் கொடுக்கணும்..அதுக்காக எதையுமே காம்ப்ரமைஸ் பண்ணிக்கக் கூடாதுன்னு நான் தெளிவா இருந்தேன். இந்தப் படத்திலும் உண்மையான நீதிமன்றத்துக்கும் திரையில் வரும் நீதிமன்றத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.இந்தியில் வெளியாகி  ஹிட் அடித்த ஜாலி எல்எல்பி படத்தின் ரைட்ஸை வாங்கித் தான் இந்தப் படத்தை எடுத்தோம். இந்தியில் என்ன மாதிரியான காட்சிகளை வைத்தார்களோ அதே காட்சிகளைத் தான் தமிழிலும் பயன்படுத்தி இருக்கேன்.படத்தை ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சீனியர் வழக்கறிஞர்கள்னு நீதித்துறை சம்மந்தப்பட்டவங்களிடம் படத்தைப் போட்டுக் காட்டின பிறகுதான் ரிலீஸ் பண்ணோம். ஏற்கனவே , ‘U' சான்றிதழ் வாங்கின படத்தை ரீமேக் செய்ததோடு பலரோட ஆலோசனைகளையும் கேட்டதால தான் என்னால துணிச்சலா படத்தை வெளியிட முடிஞ்சது.மத்தபடி நான் எந்த வகையிலும் நீதிமன்றத்தை விமர்சிக்கவில்லை.இது முழுக்க முழுக்க ரீமேக் செய்திருக்கேன். அவ்வளவுதான்.

என்ன ஒரு வருத்தம்னா,

‘ மனிதன்’கிற பெயர் தமிழ்ப் பெயர் இல்லைன்னு இந்தப் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கிடைக்கலை. இதுக்கு என்ன காரணம்ன்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைனு நினைக்குறேன்.மத்தபடி கலைஞனை அரசியல் தாண்டி சினிமா ஏத்துகிட்டா இன்னும் கூட துணிச்சலா படம் எடுக்கலாம்’ என்றார் நம்பிக்கையுடன்.

-பொன்.விமலா
 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!