தி.மு.க.- அ.தி.மு.க. டபுள் ஆக்ட் புகழ் கஸ்தூரி பாட்டியின் அடுத்த படம்! (வீடியோ)
ஒவ்வொரு ஊரிலும், கல்லூரிகளிலும், ஏன் அலுவலகங்களிலும் கூட “நாம் ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம்” என்ற உறுதிமொழியை ஏற்றுவருகிறோம். இந்த உறுதிமொழியே ஒரு குறும்படமாக இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
100 ஓட்டு பதிவாக வேண்டும், அதுவும் கள்ள ஓட்டின்றி நேர்மையான முறையில், பதிவாக வேண்டும் என்பதே இன்றைய தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். அதற்கான பல விளம்பரங்களில் நடிகர்கள் நடித்துவருகின்றனர்.
அதிமுக, திமுக தேர்தல் விளம்பரத்தில் நடித்ததனால் ஒரே நாளில் பேசப்பட்டவர் கஸ்தூரி பாட்டி. இவரின் மற்றுமொரு அவதாரமே இந்த “திங்க் அன்ட் இங்க்”, இக்குறும்படத்தை நட்டு தேவ் என்பவர் இயக்கியுள்ளார்.
நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை, சிறந்த கலைஞர் மட்டுமே என்பதை இக்குறும்படத்தின் மூலம் சிறப்பாகச் சொல்லிவிட்டார் கஸ்தூரி பாட்டி. இக்குறும்படம் 3.31 நிமிடம் தான் என்றாலும் நமக்குள் நிச்சயம் ஒரு மாறுதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இதுகுறித்து இயக்குநர் நட்டு தேவ்விடம் பேசியபோது,” இந்தக் குறும்படத்தை ஒன்றரை வருடத்திற்கு முன்னாடியே ரெடி பண்ணிட்டோம். பல விருதுகளும் கிடைச்சிது, ஆனால் யூடியூப்பில் ரிலீஸ் பண்ணாம வச்சிருந்தோம்.
திமுக, அதிமுக விளம்பரத்தை எல்லோரும் பாக்குறாங்கன்னு பாட்டி சொல்லி ரொம்ப கஷ்டப்பட்டாங்க, பழைய குறும்படத்தை போடுங்கன்னு சொன்னாங்க, அவங்களுக்காக இந்த குறும்படத்தை இப்போ ரிலீஸ் பண்ணிருக்கோம்.” என்று முடித்தார்.
நீங்களும் இந்த வீடியோவைப் பாருங்கள்! 100% ஓட்டை நேர்மையான முறையில் பதிவிடுங்கள்!