''படம் நல்லா வந்திருக்கு. ஆனாலும், சங்கடம்தான்..!’’ - இது ‘பென்சில்’ பஞ்சாயத்து!


ழக்கமாக பணம் படைத்த பலரின் மகன்கள்  'அப்பா  நான் ஹீரோவாக நடிக்கணும் " என்று அடம்பிடித்து நடித்து வெளிவந்த படங்கள் பல. அவற்றில் ரிலீஸான உடனே பல படங்கள் சுவற்றில் எறிந்த பந்தாக திரும்பி வந்தது.  கோடம்பாக்கத்தில் கோடீஸ்வரன்களாக திவான் மாதிரி வந்தவர்கள் திவால் ஆகிப்போன கதைகள் ஏராளம். 'பென்சில்"  தயாரிப்பாளரின் பங்களா போயஸ்கார்டனில் இருக்கிறது.  டாக்டரான  சண்முகம் மகனுக்கு  சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்பது கனா.  பெற்ற மகன் ஆசைக்காக 'பென்சில்" எடுத்து  இப்போது பிளேடால், தன் கையை தானே கீறிக்கொண்டதுபோல நிற்கிறார், சண்முகம்.

ஜி.வி.பிரகாஷ், திவ்யா நடிப்பில் உருவானது 'பென்சில்" திரைப்படம். கெளதம் வாசுதேவ் மேனனிடம்  உதவி இயக்குநராக வேலைப் பார்த்த மணிகண்டன் இயக்கிய இந்தப்படம்  வருகிற 13-ம்தேதி திரைக்கு வருகிறது. முதல் சினிமா இயக்கும் வாய்ப்பை கொடுத்த  தயாரிப்பாளர் சண்முகத்தின் கண்களில்  'ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்" என்று ரத்தக் கண்ணீரை வரவழைத்து விட்டார், மணிகண்டன் . 

முதல்பட வாய்ப்பு வழங்கும்போது  அறிமுக இயக்குனருக்கு ஆயிரங்களில் சம்பளம் தருவது ஆர்.பி.செளத்ரி போன்ற தயாரிப்பாளருக்கு வழக்கம். 'பென்சில்" படத்துக்கு மணிகண்டனுக்கு ஏழு லட்சம் சம்பளம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அண்மையில் 'பென்சில்" வெளிவர இருக்கும் சூழ்நிலையில்  இயக்குனர்கள் சங்கத்தில் 'எனக்கு 10 லட்சம் சம்பளம் தரவேண்டும்"" என்று தயாரிப்பாளர் மீது புகார் பட்டியல் வாசித்தார், மணிகண்டன்.       

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இரண்டும் இணைந்து  இருவரையும்  அழைத்து அருகருகில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.  'டைரக்டருக்கு சம்பளமாக 7-லட்சம் பேசப்பட்டது. நான் 15-லட்சம் கொடுத்து விட்டேன். பேசிய சம்பளத்தைவிட எட்டு லட்சம் அதிகமாக கொடுத்து விட்டேன்" என்று  சொன்னார், சண்முகம்.  'ஆமாம் 15-லட்சம் வாங்கி விட்டேன்" என்று கூலாக ஒப்புக்கொண்ட மணிகண்டன். 'எனக்கு சம்பளம் போதாது இன்னும் 10-லட்சம் தரவேண்டும்" என்றும் அடம்பிடித்தார்.

'படம்தான் நல்லா வந்திருக்கு இல்லே. பேசாம டைரக்டர் கேட்குறதை கொடுங்க" என்று மணிகண்டனுக்கு ஆதரவாக தலைவர் விக்ரமனும், செயலாளர் செல்வமணியும் குரல் கொடுத்தனர். கடைசியில் வேறு வழியில்லாமல் பேரம்பேசி ஐந்து லட்சம் கொடுத்து செட்டில் செய்தார் தயாரிப்பாளர்.  இதுபோல் புது டைரக்டர்கள் நன்றி மறந்து நடந்து கொள்கிறவரை கோடம்பாக்கத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு, பின்னங்கால் பிடறியில் இடிபட, தலைதெறிக்க ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

இதுபற்றி டாக்டர் சண்முகத்திடம் பேசினால், ‘இயக்குநர் சம்பள விஷயத்தில் சிக்கல் வந்தது உண்மைதான். அது பேசி முடிக்கப்பட்டுவிட்டது,  ஏழு லட்சம் பேசி, பதினைந்து லட்சம் கொடுக்கப்பட்டதும் உண்மைதான்.  இந்தப்படம் தொடங்கும்போது ஜி.வி.பிரகாஷுக்கு இருந்த மார்க்கெட் இப்போது அதிகரித்திருக்கிறதென்றும் அதனால் இயக்குநருக்கு  அதைவிடவும் அதிகச் சம்பளம் தரவேண்டும் என்றும் சொன்னார்கள். அதையும்  கொடுத்துவிட்டோம். படம் நன்றாக வந்திருக்கிறது. நன்றாகப் போகும்.  ஆனால் படத்தைத் தயாரித்த நாங்கள் மட்டும் நட்டப்பட்டிருக்கிறோம்” என்கிறார் வேதனையுடன்.
 

- சத்யாபதி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!