வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (13/05/2016)

கடைசி தொடர்பு:14:50 (13/05/2016)

24 மணி நேரத்தில் 24 பட திருட்டு டி.வி.டி.! - சூர்யா அதிர்ச்சி!

 

 விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா சமந்தா உள்ளிட்டோர் நடித்த 24 படம் மே 6 ஆம் தேதி வெளியானது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அந்நாளில் படம் வெளியானது. பெங்களூரிலும் தமிழிலேயே படம் வெளியாகியிருக்கிறது.

பெங்களூரில் உள்ள ஓரியண்டல்மாலில் உள்ள பிவிபி திரையரங்கில் அப்படம் வெளியாகியிருக்கிறது. அங்கு திரையிடப்பட்ட முதல்காட்சியிலேயே விசிடி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை க்யூபில் படத்தை வெளியிட்ட நிறுவனத்தினர் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இத்தகவலை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு படத்தின் தமிழக உரிமையைக் கையில் வைத்திருக்கும் ஞானவேல்ராஜா, அதிரடியாக சென்னையிலுள்ள பிவிஆர் திரையரங்குகளில் படத்தைத் திரையிடத் தடை விதித்திருக்கிறார். அதோடு திருட்டுவிசிடிக்கெதிராக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து பெரியஅளவிலான போராட்டம் நடத்தத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.

இது தொடர்பாக, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் கேட்டால், நாங்கள் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி புகார் கொடுத்திருக்கிறோம், இன்று மாலை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொள்ளும் கூட்டம் நடக்கவிருக்கிறது, அந்தக்கூட்டத்தில் மேற்கொண்டு என்ன செய்வதென முடிவு செய்வோம் அதையொட்டி எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று சொல்கிறார். படத்தின் நாயகன் மட்டுமின்றி தயாரிக்கவும் செய்தவர் சூர்யா. அவர் இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் சொல்கிறார் ஞானவேல்ராஜா. 

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட பெங்குளூர் திரையரங்கில் ஏற்கெனவே இஞ்சிஇடுப்பழகி, பெங்களூர்நாட்கள் ஆகிய படங்களின் திருட்டுவிசிடி தயாரிக்கப்பட்டதாகவும் அப்போதே அவர்கள் மீது புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
 
தமிழகத்திலுள்ள சில திரையரங்குகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள். அப்படி நடக்கும்போது சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்றும் ஆபரேட்டர் தவறு செய்துவிட்டார் என்று சொல்லியும் தப்பித்துக்கொள்கிறார்களாம்.
 
எனவே இனிமேல் ஒரு திரையரங்கில் படத்தின் திருட்டுவிசிடி தயாரிக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாகத் தெரிந்தால் அத்திரையரங்குக்கு ஒரு கோடி தண்டம் விதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை தயாரிப்பாளர்கள்தரப்பில் எழுப்பப்பட்டிருக்கிறதாம். கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பார்கள் என்றும் தெரிகிறது.   
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்