’ரஜினியை மிக மிக நல்ல மனிதன் என்று பலநூறு முறை சொல்லலாம்!’ - நெகிழ்கிறார் பாலகுமாரன்

பாட்ஷா. ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்-களில் ஒன்று. 1987ல் கமலின், நாயகன் படத்தில் வசனங்களை எழுதிய பாலகுமாரன் 1995ல் ரஜினியோடு கைகோர்த்த படம்தான் பாட்ஷா.  இன்றைக்கும் ரசிகர்களாலும், திரையுலகினராலும் கொண்டாடப்படுகிற பஞ்ச் டயலாக் பலவற்றின் டிரெண்ட் செட்டரே இந்தப் பட வசனங்கள்தான்.

‘என் பேர் மாணிக்கம்.. எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

'நம்மளை நாம கவனிச்சாதான்.. ஆண்டவன் நம்மளை கவனிப்பான்’

‘இந்தியனாச்சே. பேசலைன்னா செத்துப் போய்டுவான்’

‘வீட்ல உட்கார்ந்து படிக்கலாம்.. ஹாஸ்டல்ல சேர்ந்து படிக்கலாம்.. கெஸ்ட் ஹவுஸ் சேர்ந்துதான் படிக்கணும்னா....’

‘நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் சண்டவெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரி அடிக்க முடியும்..;

‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கைவிட்டுடுவான்’

‘நான் ஒருதடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி’

என்று காலத்துக்கும் நின்று பேச வைக்கும் வசனங்கள், பாலகுமாரனின் பேனா வண்ணம்தான்.   சாதாரணமான வார்த்தையான ‘உண்மையச் சொன்னேன்!”-கூட, அந்தக் காட்சியமைப்பில் ரஜினி பேசும்போது ‘பஞ்ச் டயலாக்’ ஆனது.

இவருக்கும் ரஜினிக்குமான நட்பு, ஆழமானது. ஆன்மிக விஷயத்தில் இருவருமே தங்களுக்கான குருவைத் தேடுவதில் ஆரம்பித்து, பல விஷயங்களைப் பேசும் நட்பு இவர்களுடையது.

சினிமாவிலிருந்து விலகி, முழு ஆன்மிகவாதியாக மாறிவிட்டார் பாலகுமாரன். இந்நிலையில் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதுபற்றி தன் முகநூலில் குறிப்பிட்டிருக்கற பாலகுமாரன், ரஜினிகாந்த்தின் எளிமை குறித்துப் பாராட்டியிருக்கிறார்.
அவர் பகிர்ந்திருப்பதாவது:   

மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும் இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது

என் காது சமீபமாய் மந்தித்திருக்கிறது. ஆயினும் பதினைந்து நிமிடப் பேச்சில் அன்பும் அக்கறையும் இருந்தன.

அந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இனோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்தாங்கினார். என் புத்தகங்கள் தந்தேன். மனம் பலமாய் நலமாய் இருப்பது சொன்னேன். தன் நலன் பற்றியும் பேசினார்

நான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு.”

.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!