'அய்யோ அது நான் இல்லைங்க!’ - பாபிசிம்ஹா புகார் | Bobby Simhaa denies involvement in upcoming film; director says otherwise

வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (17/05/2016)

கடைசி தொடர்பு:12:43 (17/05/2016)

'அய்யோ அது நான் இல்லைங்க!’ - பாபிசிம்ஹா புகார்

சில நாட்களாகவே பத்திரிகை விளம்பரங்களில், பாபிசிம்ஹா மிரட்டும் “ மீரா ஜாக்கிரதை”  என்ற திரைப்படத்தின் விளம்பரங்களைக் காணமுடிகிறது. மே 27 முதல் உலகமெங்கும் வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்படத்திற்கு எதிராக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் பாபிசிம்ஹா.

அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், “நான் கடந்த மூன்று வருடங்களாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சிலர் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக சில தினசரி நாளிதழ்களில் நான் யார் என்று கேள்விப்படாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் ‘மீரா ஜாக்கிரதை’ எனும் படத்தில் நான் நடித்ததாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய படமான ‘உறுமீன்’ படத்தின் புகைப்படங்களை பயன்படுத்துகின்றனர். நான் ‘மீரா ஜாக்கிரதை’ படத்தில் நடித்ததும் இல்லை டப்பிங் பேசியதும் இல்லை. அந்த படத்தின் கதாநாயகி என்று கூறப்படும் மோனிகா அவர்களை நான் நேரில் பார்த்ததும் இல்லை.

ஆகவே, மேற்படி நான் கூறிய தகவல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர் நடிக்கவில்லை என்று கூறிய “மீரா ஜாக்கிரதை” படத்திற்கான டிரெய்லர் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாபிசிம்ஹா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்படத்தை கேசவன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

பாபிசிம்ஹா இந்த மனுவை கடந்த ஞாயிறு அன்று நடிகர்சங்கத்தில் கொடுத்திருக்கிறார். நேற்று திங்கள் கிழமை தேர்தல் பிஸியில் இருப்பதாகவும், இரு தரப்பினரையும் அழைத்து நாசர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவிலேயே பாபிசிம்ஹா கூறுவது உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்