மும்பை வீதிகளில் பாடல் பாடி 12 ரூபாய் பிச்சை எடுத்த பாலிவுட் பாடகர் யார்? (வைரல் வீடியோ )


விருதுகளால் நிறைந்திருக்கும் ஓர் அறையில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருக்கிறது ஒரு பனிரெண்டு ரூபாய். அந்தப் பனிரெண்டு ரூபாய் யாருக்கு.. யார் கொடுத்தது தெரியுமா? லட்சங்களில் சம்பாதிக்கும் ஒரு பிரபல பாடகருக்கு, யாரோ ஒரு இளைஞர் கொடுத்தது!

மும்பை வீதிகளில் ஒருவர் பாலிவுட் பாடல்களை பாடி பிச்சை எடுக்கிறார். பலர் கடந்துபோக, சிலர் நின்று ரசிக்கின்றனர். ஓர் இளைஞர் அருகே வந்து ‘நல்லா பாடுறீங்க.. நான் என் ஃபோன்ல ரெகார்ட் பண்ணிக்கவா’ என்று கேட்டு பதிவு செய்து கொள்கிறார். சிறிதளவே கூட்டம் கூட, பிரபல பாடலொன்றைப் பாடிவிட்டு தொய்வாக நடந்து சென்று விடுகிறார் அவர்.
 

‘சங்கீதம் என்கிற கலை ஒரு சிலருக்கு மட்டுமே கைகூடுகிறது. நான் இசையைப் பொறுத்தவரை இன்னும் மாணவன்தான். உங்களிடம் நேரடியாக வர ஆசைப்பட்டேன். என்னை இந்த உருவத்தில் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால்’ என்று சொல்லி கண்ணாடியைக் கழட்டிவிட்டு, ‘இந்த உருவத்தில் தெரியலாம்’ என்று சொல்ல.. ஒப்பனைக் கலைஞர்கள் அவரது ஒப்பனையைக் கலைக்கிறார்கள்.
அவர் சோனுநிகம். பாலிவுட்டின் பிரபல பாடகர். தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். சகுனி படத்தில் ‘மனசெல்லாம் மழையே’ பாடல் அவர் குரல்வளம்தான்.
 

“இந்த அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாத, ஒரு தெளிவைப் பெற்றுத்தந்த அனுபவமாக உணர்கிறேன். அதே நான்தான். அதே குரல்தான். உடையிலும், வயதான தோற்றத்திலும்தான் வித்தியாசம் காண்பித்தேன். யாரோ ஒருவர் வந்து, ‘அங்கிள் நீங்க சாப்டீங்களா?’ என்று கேட்டு யாரும் பார்க்காதவண்ணம் என் உள்ளங்கையில் பனிரெண்டு ரூபாயைக் கொடுத்தார். அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. லட்சக்கணக்கில் சம்பாதித்தபோது, உணராத மகிழ்ச்சி, ஏதோ ஓர் இடத்தில், யாரோ ஒருவர் கொடுத்த 12 ரூபாயில் எனக்குக் கிடைத்தது. நிச்சயம் அவரை திரும்ப சந்தித்து, என் அன்பின் வெளிப்பாடாய், அவருக்கு ஏதேனும் பரிசளிப்பேன்.

நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை நாம் கவனிக்கத் தவறி வருகிறோம். அருகிலேயே இருந்தாலும், நல்லவற்றைப் பாராட்ட மறந்து வருகிறோம். எனக்கும் இது ஒரு பாடம். சந்தோஷம் நம் அருகிலேயே இருக்கிறது. அங்கேயும் இங்கேயும் தேடி ஓட வேண்டாம்”
 

 இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார். அவரது பிரபலம் அறிய, வீடியோவின் 4.44வது நிமிடத்தில், அவர் மேடையொன்றில் பாடியதை இணைத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான முன் பாடும் இவரா, அப்படி.. அந்தத் தோற்றத்தில் என்று பிரமிக்க வைக்கிறார்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!