திருட்டு டிவிடியை பஸ்களில் ஒளிபரப்புவது சட்டவிரோதமானதே! விஷால் கடிதம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் மூலமாக வேண்டுகோள் கடிதம் ஒன்று விடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது. " பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்! இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு டிவிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெறப் போராட வேண்டிய நிலை, இது திரை உலகைச் சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறி பேருந்தை ஓட்டுவதும், பயணச் சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்டவிரோதமானதோ, அது போலவே திருட்டு டிவிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்டவிரோதமானதே.. அதனால், திரை உலகைக் காப்பாற்ற நாங்கள் பல நிலைகளில் போராடி வருகிறோம்.

அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுனர்களால் இந்தத் தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு அவர் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!