கைதட்டக் கூட நான் மறந்து விட்டேன்! - 'மீன்குழம்பும் மண்பானையும்' இசைவெளியீட்டில் கே.எஸ்.ரவிகுமார் நெகிழ்ச்சி!

மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல இயக்குநர்களும், திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.  இளைய திலகம் பிரபுவை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சி.வி. ராஜேந்திரன் "பிரபுவை நான் நடிக்க அனுப்பக் கோரி பலமுறை நடிகர் திலகத்திடம் கேட்டுப் பார்த்தேன். ஆனால் அவரோ அத்தனை முறையும் 'அவன படிக்க வெச்சு பெரிய போலீசா ஆக்கணும்”ன்னு சொல்லுவார்.

அப்போதெல்லாம் நான், ‘என்னுடைய ஒரு படம் நடித்துக் கொடுத்து விட்டு அவர் என்ன வேணாலும் படிக்கட்டும்’ என்று கூறுவேன். பிறகு ஒரு நாள் சிவாஜியிடம் பொறுமையாகப் பேசி, அவரின் அனுமதியோடு எடுக்கப்பட்ட படம் தான் 'சங்கிலி'" என்று தன் நினைவை பகிர்ந்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் , "நடிகர் திலகத்தின் குடும்பத்தை பற்றி பலரும் கூறி விட்டனர், என்ன பேசுவது என சிந்தித்துக் கொண்டே கைதட்டக்கூட நான் மறந்து விட்டேன். இளைய திலகம் பிரபுவுடன் இணைந்து நான் இரண்டு படங்கள் பணியாற்றியுள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று, வருங்காலங்களிலும் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.. திரைப்படத்திற்காக மட்டுமில்லை, உங்கள் வீட்டில் சமைத்த உணவை உண்டு பல நாட்கள் ஆனதாலும் தான்" என்று பேசி வாழ்த்து கூறினார்.

திரைப்படத்தின் கதாநாயகன் காளிதாசன் ஜெயராமன், படம் தொடங்கி முடிவதற்குள் தான் 6 கிலோ வரை எடை கூடியதாகவும், அதற்கு நடிகர் பிரபு அவர்களின் இல்லத்திலிருந்து வரும் உணவே காரணம் என்றும் கூறினார். பிரபுவின் இருநூறாவது படமான இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கியுள்ளார். இமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட ராம்குமார் கணேசன் பெற்றுக் கொண்டார்.

இப்படத்தின் டீஸர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

பா. அபிரக்ஷன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!