நடிகர் விஷால் தஞ்சாவூரில் விவசாயம் செய்ய போவதாக அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஆதிரங்கம் கிராமத்தில் இன்று நடைபெற்ற நெல் திருவிழாவில் நடிகர் விஷால், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
நாற்றாங்காலில் விதைநெல் தூவி, பின்னர் சிறப்புரையாற்றினார் விஷால். “ எந்த ஒரு சூழலிலும் விவசாயிகள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கக் கூடாது. பிரச்னைகளுக்குத் தற்கொலை தீர்வாகாது. வாழ்ந்து போராடி வெற்றி பெற வேண்டும்.
எல்லா துறைகளிலும் பிரச்னைகள் இருக்கிறது. இதற்கு தற்கொலையை தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் பாதிக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார்கள். கஷ்டங்களில் தவிக்கும் விவசாயிகளுக்கு நான் உதவி செய்யக் காத்திருக்கிறேன். விவசாயிகள் கஷ்டப்படக்கூடாது. ஒரு நாட்டில் விவசாயி நன்றாக இருந்தால் அந்த நாடு நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
நான் தஞ்சாவூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன். பத்திரிகைகளில் மட்டும் விவசாயத்தை பற்றி படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது. நேரடியாக நிலத்தில் இறங்கிப் பார்த்தால் தான் அனுபவப்பூர்வமாக உணர முடியும் என்றார் விஷால்.
தொடர்ந்து நடிகை ரோகிணி பேசும்போது “பத்தாண்டுகளுக்கு முன் நம்மாழ்வார் அய்யாவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த விழாவில் இந்தமுறை நான் கலந்து கொள்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். விவசாயிகளுக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என மனதார நினைக்கிறார் விஷால். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட விவசாயி பாலனுக்கு முதல் ஆளாக தாமாக ஓடி வந்து உதவினார் . அதற்கு பெரிய மனசு வேணும்” என நெகிழ்ச்சியோடு பேசினார் ரோகிணி.
கு. ராமகிருஷணன்