Published:Updated:

கார்த்திக் சுப்புராஜுக்கு ‘ரெட்’ கார்டா? உண்மை என்ன? வாட்ஸ் அப் ஆடியோ விளக்கங்கள்!

Vikatan
கார்த்திக் சுப்புராஜுக்கு ‘ரெட்’ கார்டா? உண்மை என்ன? வாட்ஸ் அப் ஆடியோ விளக்கங்கள்!
கார்த்திக் சுப்புராஜுக்கு ‘ரெட்’ கார்டா? உண்மை என்ன? வாட்ஸ் அப் ஆடியோ விளக்கங்கள்!

’’இறைவி’ படத்தின் காட்சியில், தயாரிப்பாளர் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா முடித்த படத்தை ஒரு சில மனஸ்தாபத்தால் வெளியிடாமல் இழுத்தடித்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதோடு , ஒரு கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யாவை கொலை செய்யவும் முற்படுவார். படத்தின் இந்த பகுதிகள் சினிமா தயாரிப்பாளர்களை அவதூறாக சித்தரித்திருப்பதாகக் கார்த்திக் சுப்புராஜ் மீது தயாரிப்பாளர்கள் பலரும் புகார் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ‘ரெட்’ கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இதற்கு வாட்ஸப் வாய்ஸ் மெஸேஜ் ஒன்றின் மூலம் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், ”அனைத்துத் தயாரிப்பாளர் நண்பர்களுக்கும் வணக்கம். அனைவரின் கருத்துகளும் கேட்டேன்.அனைத்துத் தயாரிப்பாளர்களின் கருத்துகளுக்கும் நான் தலை வணங்குகிறேன். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் 15, 20 வருடங்கள் துணை இயக்குநராக பணிபுரிந்து போராடி சினிமாவில் வாய்ப்புப் பெற்ற கஷ்டத்தைக் கூட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படவில்லை. வந்தார் ஆறே மாதங்களில் வாய்ப்புக் கிடைத்தது. சி.விகுமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடையக் கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார்.

இப்போதும் நல்ல படமாக ஒரு விருதுக்குரிய படமாக , மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்தை வைத்து, சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் அதிக பட்ஜெட்டில் இந்தப் படத்தை(இறைவி) முடித்துள்ளார். இதற்கு முந்தையப் படத்தில்(ஜிகர்தண்டா) கதிரேசன் சார் என்ன அவஸ்தை பட்டாரோ அதைவிட இரண்டு மடங்கு அவஸ்தை இந்தப் படத்தில் சி.வி.குமாருக்கு இருந்திருக்கிறது.

அதற்காக பட்ட கடனையும், பிரச்னைகளையும் தாங்கிக் கொண்டு படத்தை ரிலீஸ் செய்யவேண்டியக் கட்டாயத்தில் சி.வி.குமார் இருந்திருக்கிறார். அப்படியிருக்கும் சூழ்நிலையில், ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாய் கடனாக இருந்தால் கூட அத்துடன் முடிந்தது. அவர் மீண்டும் மதுரைக்கு தான் கிளம்ப வேண்டும். ஏதோ சின்னப் படங்கள் தயாரித்து தொடர்ந்து ஜெயித்து வருகிறார். ஏனெனில் அவர் பட்ஜெட்டே ஒன்றிரண்டு கோடி தான். அவருக்கு பதிமூன்றரைக் கோடி பட்ஜெட் அளவிற்கு இந்தப் படத்தின் பட்ஜெட்டைக் கொண்டுவந்து நிறுத்தியிருகிறார் சுப்புராஜ். சொன்ன பட்ஜெட் வேறு.

இத்தனை பிரச்னைகளையும் தாங்கிக்கொண்டு இந்தப் படத்தைப் பற்றி தவறாக ஏதோ ஒரு விஷயம் ரிலீஸுக்கு முன்பு வந்திருந்தால் அவரையும், அவரது குடும்பத்தையும் யாரும் காப்பாற்ற முடியாது. அப்படி ஒரு சூழலில் படத்தைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டியக் கட்டாயத்தில் இருந்திருக்கிறார் சி.வி.குமார். இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும். சி.வி.குமாரின் வேதனை உங்கள் அனைவரையும் தாண்டிய வேதனை.

அந்தப் படத்தை எப்படியேனும் கொண்டுவந்து சேர்த்துவிட வேண்டிய இக்கட்டான சூழலில் தான் அவர் மாட்டியிருந்தாரேயன்றி இதைக் கண்டிக்காமல் இருக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. இதற்கு எல்லாரும் இணைந்து முடிவெடுப்போம். தயாரிப்பாளர்கள் எல்லாரும் இணைந்து எடுக்கும் முடிவில் உடன் நிற்போம் நன்றி’ என முடித்திருந்தார் ஞானவேல் ராஜா.

இந்தப் பிரச்னைக் குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பாபு கணேஷ் ஆடியோ மெஸேஜ் ஒன்றை வாட்ஸ் அப்பில் பதிவிட்டிருந்தார். அதில், “அப்படியெல்லாம் நினைத்தபடி தயாரிப்பாளர்கள் ரெட் கார்ட்

கொடுக்க முடியாது. ஏனெனில் இதற்கெல்லாம் டெல்லியில் முறையான இயக்கம் இருக்கிறது. அதன்மூலம்தான் செய்ய முடியும்.  கார்த்திக் சுப்புராஜ் என்பவர் நல்ல இயக்குநர். அதை யாரும் மறுக்கவில்லை. அவர் சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் அதிக அளவில் பட்ஜெட் ஆகியிருப்பது ஒன்றுதான் அவர்மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு தொழிலில் ஒரு பட்ஜெட் சொல்லி, அதை மீறி செலவாகி நஷ்டம் வரும்போது அதற்கு இயக்குநரே பொறுப்பு என்று ஒரு ஷரத்து அக்ரிமென்டில் இருக்கும். இதில் அந்த ஷரத்து இருக்கிறதா என்றே நமக்கெல்லாம் தெரியவில்லை. ஒரு குறும்பட இயக்குநராக இருந்து தற்போது ஒரு சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சந்தோஷம்.

முன்பு வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்திலும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நஷ்டம் என பிரச்னை வந்திருக்கிறது. இப்போது ‘இறைவி’ படத்திலும் அதே பிரச்னைதான் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரச்னைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு படமெடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டமடைகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது நாமறிந்ததே. இதுதான் இப்போதைய பிரச்னை. அதை விடுத்து தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம். உண்மை நிலவரம் வேண்டுமானால் தலைவர் கலைப்புலி தாணு,  செயலாளர் சிவா என பலரும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வார்கள். அதை விடுத்து தேவையில்லாமல் வதந்திகள் வேண்டாம். கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் என்று எல்லாரும் நல்லாருக்கணும்” என ’ரெட் கார்ட்’ வதந்திகளுக்கு அந்த ஆடியோவில் கருத்து கூறியுள்ளார் பாபு கணேஷ்.

Vikatan