தொடங்கியது எதிர்ப்பு! சபாஷ் நாயுடு போஸ்டர் கிழிப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது “சபாஷ் நாயுடு”. தலைப்பில் சாதி பெயர் இடம்பெறுவதால் எதிர்ப்புகள் ஆரம்பதிலிருந்தே கிளம்பிவருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையின் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் வக்கீல் ஜெயபால் உள்ளிட்டோர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது,

“கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயரிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்தப் படத்தை வெளியிட அனுமதி அளித்தால் சாதி பெயரில் படத்தலைப்புகளை கொச்சையாக அமைக்கும் தவறான செயலுக்கு முன்னுதாரணமாக அமையும். ஆகவே இந்த படத்தின் தலைப்பை மாற்றும் வரையில், இந்த படத்தின் விளம்பரங்கள்கூட வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இளங்கோவன் மற்றும் வக்கீல் ஜெயபால் இருவரும் ஏற்கெனவே சிம்புவின் பீப் பாடலுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள். தற்பொழுது கமல்ஹாசன் படத்தலைப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!