பெங்களூருவில் அவமதிக்கப்பட்ட இளையராஜா..! என்ன காரணம்?

பெங்களூரு விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா, பாதுகாப்பு அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இளையராஜா கோயிலுக்கு சென்றுவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.அப்போது, இளையராஜாவை தடுத்து நிறுத்திய அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, பையில் தேங்காய், விபூதி போன்ற பிரசாதப் பொருட்கள் இருந்ததால், அவற்றை அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, பிரசாதப் பொருட்களை அங்கேயே விட்டுச் செல்ல அதிகாரிகள் நிர்ப்பந்தித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த இளையராஜா, பிரசாதப் பொருட்களை விட்டுச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இளையராஜாவை அங்கிருந்த அதிகாரிகள் காத்திருக்க வைத்தனர்.

அப்போது, உடனிருந்த இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் எடுத்ததோடு, அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். சகப்பயணிகளும் இளையராஜா குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து கார்த்திக் ராஜா செல்போனில் இருந்த படத்தை நீக்கிய அதிகாரிகள், பின்னர் பிரசாதப் பொருட்களுடன் செல்ல அனுமதித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் இளையராஜா அங்கிருந்து சென்றுள்ளார். இதனை உறுதி செய்துள்ள கார்த்திக் ராஜா, இந்த செயலுக்காக விமான நிலைய அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பெங்களூரு விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!