‘சதுரங்க வேட்டை’ நாயகி இஷாரா, புதுப்பட இயக்குநர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு!

சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இஷாரா. அடுத்ததாக, பப்பாளி என்ற படத்திலும் நடித்தார். அவர் இப்போது ‘கல்லூரி’ அகில் நாயகனாக நடிக்கும் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  கே.கே கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் என்பவர் தயாரிக்க கேவின் ஜோசப் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த இஷாரா தலைமறைவாகி விட்டதாக படத்தின் தயாரிப்பளர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளனர்.  .

‘இஷாராவை அன்று 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்குப் பிறகு படப்பிடிப்பை நடத்தினோம். நாங்கள் கேட்டது 20 நாட்கள் தான். ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் வந்தார்.  அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்குப் பிறகு அவரிடம் தொடர்புகொண்டு தேதி கேட்டதற்கு துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன் வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று வாட்ஸ் அப்பில் தான் பதில் கூறினார். தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் டைரக்டர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னார்.

சில சமயங்களில் அவரை அழைத்தால் யாரோ ஒரு ஆண் குரல்தான் பதில் சொல்லும். இதோ கூப்பிட சொல்கிறோம் என்று சொல்லி அதோடு ஃபோன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும். நாங்கள் கதையில் ஏதாவது திருத்தம் இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்றோம். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்பார். தேதி கொடுப்பார் ஆனால் சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வரவே இல்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுவிட்டோம். அவரால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம். அவர் கேரளா நடிகர் சங்கத்தில் உறுப்பினர் என்பதால், அங்கும்  சென்று முறையிட்டோம். அவர்களுக்கும் இஷாரா தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை.

தயாரிப்பாளர் கில்டில் திரு.ஜாக்குவார் தங்கம் மூலம் இஷாராவிடம் பேசச் சொன்னோம். அவர்களுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. இஷாரவுக்கு போன் செய்தால், எங்கள் எண்களை எல்லாம் ப்ளாக் லிஸ்ட் செய்துவிட்டார். ‘உங்களது அணுகுமுறை சரியில்லை.. நாங்கள் பத்திரிகையாளர்களிடம் முறையிடுவோம், கோர்ட்டுக்கும் போவோம்’ என்று மெசேஜ் அனுப்பினோம். அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் “ போங்க “  என்று. இப்படியெல்லாம் தயாரிப்பாளர்களை வாட்டி வதைக்கிற நடிகைகளை நம்பித்தான் தமிழ் சினிமா பல கோடிகளை முதலீடு செய்கிறது. அவர்களது முதலீட்டில் விளையாடும்,  புதியவர்களின் கனவுகளில் வெந்நீர் ஊற்றும் இது மாதிரியான நடிகைகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் சரி என்று முடிவெடுத்திருக்கிறோம். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்ய உள்ளோம்’

இவ்வாறு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பிலிருந்து வந்திருந்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இஷாரா நாயர் தரப்பில் சொல்லப்பட்ட காரணம் வேறு,

 ‘அது எவ்வளவு கேவலம் என்று என்னால் இதை விவரிக்கக் கூட முடியவில்லை. என்னிடம் பேசும் போது என்னைத் தொடுவதற்கு முயற்சி செய்தார். என்னை சுவரில் தள்ளி, வாடி போடி என்றெல்லாம் அழைத்துப் பேசினார்.  இது புரொஃபஷனலாக எனக்குப் படவில்லை. நான் இதை தகாத முறையாகவே உணர்ந்ததால் இந்தப் படத்தில் என்னால் வேலை செய்ய முடியவில்லை’ என இஷாரா தன் பக்க நியாயத்தை வைத்திருக்கிறார்.

நடிகையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன இயக்குநர், கெவின்  ‘நான் நாகர்கோயில் பக்கத்திலிருந்து வந்தவன். அதனால், பேச்சுவழக்கில்தான் அப்படி அழைத்தேன். மரியாதைக் குறைவாக என்றெல்லாம் இல்லை. மற்றபடி அவர் சொல்வதெல்லாம் தவறு. அவர் பாதுகாப்பின்மையாக உணர்ந்தால், உடன் ஆட்களையும் அழைத்துக் கொண்டு வரலாம்.  எப்படியாவது படத்தை முடித்துக் கொடுத்தால் போதும்’ என்றார்.

ஒரு படம் எடுத்து வெளியிட்டாலும் பிரச்னைகள்.. வெளியிடவும் பிரச்னைகள்... படப்பிடிப்பிலும் பிரச்னைகளா! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!