வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (08/06/2016)

கடைசி தொடர்பு:18:00 (08/06/2016)

மீண்டும் சூடுபிடிக்கிறது கலாபவன் மணி மரணத்தின் சர்ச்சை!

பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணி, இந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம்தேதி  மரணமடைந்தார். சந்தேகத்துக்கு இடமாக, அவரது உடலில் அளவுக்கதிகமான மீத்தேல் ஆல்கஹால் இருப்பதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியானது.

 ‘அண்ணன் மணியின் மரணம் நிச்சயம் சந்தேகத்துக்கிடமானது’ என்ற அவரது சகோதரர் ராமகிருஷ்ணன், ‘மணி அண்ணா, பீர் மட்டுமே குடிப்பார். டாக்டர்கள் எங்களிடம் சொன்னது, ‘லைசென்ஸ் பெற்றுள்ள மதுவில் இத்தனை மீத்தேல் ஆல்கஹால் இருக்க வாய்ப்பில்லை’  என்பதே. எனவே அதற்கு முன்தினம் அவரோடு இருந்த அனைவர்மீதும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது’ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். மரணத்திற்கு முன் தினம் இரவு கலாபவன் மணியுடன் சின்னத்திரை தொகுப்பாளரும், திரை நடிகருமான ‘தரிகிட’ சாபு, மற்றொரு நடிகர் ‘ஜாஃபர் இடுக்கி’ ஆகியோர் உடனிருந்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை இவர்களை விசாரித்து வந்தது. 


விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், நேற்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஜாஃபர் இடுக்கியின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் ராமகிருஷ்ணன். அதில் ‘இது சதி என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும். மணி அண்ணாவின் மரணத்தில் தொடர்புடைய ஜாஃபர் இடுக்கியை, மணி அண்ணாவின் மற்ற நண்பர்கள் அழைத்து வரவேற்பதை இங்கே பாருங்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார். இதில் என்ன சதி என்பது நமக்கு புரியவில்லை. இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் கொலையை அரங்கேற்றியிருப்பார்கள் என்பதே ராமகிருஷ்ணனின் வாதம். 

இது சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் ஜாஃபர் இடுக்கியைத் தொடர்பு கொண்டபோது, ‘நான் அன்றாடம் பல வேலைகளைச் செய்து வாழ்ந்து வருகிறேன். இதில் என்ன இருக்கிறதென்று ராமகிருஷ்ணன் பழி போடுகிறார் என்று புரியவில்லை. அவருக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. காவல்துறை எந்த நேரத்தில் அழைத்தாலும் என் முழு ஒத்துழைப்பை தரத் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, கலாபவன் மணியின் மரணத்தின் மர்மம்.. இன்னும் விலகாமலே இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்