சினிமா ஏன் சிரமப்படுகிறது..? -டி.ஆர். சொல்லும் காரணம்!

திண்டுக்கல்: திரை உலகம் தத்தளித்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், திரையரங்குகளில் வாங்கும் கட்டணமே. 100 ரூபாய்க்கு கீழே டிக்கெட் விற்றால் மட்டுமே மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்றி நடைபெற்ற திருமண விழாவிற்கு வந்திருந்த திரைப்பட நடிகரும், இயக்குநரும், அரசியல் கட்சித் தலைவருமான டி.ராஜேந்தர் கூறும்போது, ''உலகத்திலுள்ள மக்களை திருத்த முடியாது, ஏமாற்ற மட்டுமே முடியும். வாக்குக்கு மக்கள் பணம் வாங்குவதாக தேர்தலின்போது கூறினார்கள்.

படித்தவர்கள், தெளிவானவர்கள். படிக்காதவர்கள் தெளிவானவர்கள் மட்டுமல்ல, நெளிவு, சுளிவானவர்கள். என்ன கொடுத்தாலும் அவர்கள் பிடித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போடுவார்கள். அரசியலுக்குள் தற்போது நான் செல்லவில்லை. ஆகவேதான் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில்கூட நான் யாருக்கும் வாக்கு சேகரிக்கவில்லை. மூன்றாம் அணி மிகவும் பரிதாபத்துக்குரிய அணியாக மாறியுள்ளது. நல்ல தலைவன் என்பவன் அடுத்த தலைமுறையை சிந்திப்பவன். ஆனால் அரசியல்வாதி அடுத்த தேர்தலை சிந்திப்பவன்.

அரசியல்வாதியை குறை கூற முடியாது. மக்கள் தேர்தலின்போது பணத்தை மட்டுமே பார்க்கின்றனர். மக்கள் வாக்கை விற்க முயலும்போது, அரசியல்வாதிகள் நாட்டை விற்பார்கள். ஆகவே, மக்கள் திருந்த வேண்டும். நான் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பழனியில்தான் நின்றேன். மீண்டும் இதே பழனியில் போகர் வாழும் பழனியில், புலிப்பாணி இருக்கும் பழனியில் மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தை ஆரம்பிக்க பிள்ளையார்சுழி போடுகிறேன்.

பல வருடங்களாகவே நான் ஆன்மிகத்தை நேசிப்பவன். எனக்குள் இருந்த ஆன்மிக உணர்வு இப்போது அதிகரித்துள்ளது. நான் வெற்றி பெற காரணம் தன்னம்பிக்கை என்கின்றனர். ஆனால் அது கடவுளின் அருள். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. கிரியாசக்தி என்பது போல நான் எதுவும் இல்லை. பகவத்கீதையை முழுமையாக நம்புகிறேன். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற நிலைக்கு தற்போது வந்துவிட்டேன். மனிதனை சொல்லவில்லை குத்தம். எல்லாமே இறைவன் சித்தம்.

முன்பு ஷத்திரியனா இருந்தேன். இப்போ சாணக்கியனா மாறிட்டேன். முன்பு வேகம் மட்டுமே இருந்தது. இப்போது நான் விவேகத்துடன் இருக்கிறேன். எப்போதுமே கோபப்பட்டால் மரியாதை இருக்காது. சுனாமி எப்போதாவது வந்தால்தான் மரியாதை. அதுபோலதான் கோபமும்.

ஒரு தலை ராகம் எடுத்த நான் இன்று ஒருதலைக் காதல் எடுக்கிறேன். அன்றிருந்தது போலவே இன்றும் நான் இருக்க காரணம் தமிழ். நான் ''மேக் அப்' போடுபவன் அல்ல. என் முகத்தைவிட அகத்தையே அதிகம் காட்ட விரும்புகிறேன். இங்கு வந்தது என் முகத்தை காட்ட அல்ல. ஆறுமுகத்தை பார்க்க. அவரை பார்த்தால் ஏறுமுகம். என் எதுகை, மோனைக்கு இறைவனே காரணம். எது கை கொடுக்கிறதோ இல்லையோ எதுகை எனக்கு கை கொடுக்கிறது. அடுக்கு மொழிக்கு காரணம் தமிழக்கடவுள் முருகனே.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இதுநம்ம ஆளு எனது தயாரிப்பு. இந்த படம் நன்றாக ஓடுவதற்கு மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். திரை உலகம் கஷ்டமான சூழலில் உள்ளது. தத்தளித்துக் கொண்டு, திக்கித்திணறிக் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், திரையரங்குகளில் வாங்கும் கட்டணமே.

அதேபோல அங்கு விற்கும் திண்பண்டங்களும் அதிக விலை. சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளை கூட்டிக் கொண்டு படம் பார்க்க திரையரங்கிற்கு போக முடியாது. தியேட்டரில் 100 ரூபாய்க்கு கீழே டிக்கெட் விற்றால் மட்டுமே மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!