ராஜீவ்குமாருக்கு பதிலாக சபாஷ் நாயுடு படத்தை கமலே இயக்குகிறார்! | Kamal Hassan comes to rescue ailing director Rajeev in USA

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (13/06/2016)

கடைசி தொடர்பு:16:18 (13/06/2016)

ராஜீவ்குமாருக்கு பதிலாக சபாஷ் நாயுடு படத்தை கமலே இயக்குகிறார்!

கமல்ஹாசன், ஸ்ருதி, ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் “சபாஷ் நாயுடு”. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி நடந்துவருகிறது.

இப்படத்தினை கமல்ஹாசனின் நண்பரான ராஜீவ்குமார் இயக்கிவந்தார். ராஜீவ் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கமல்ஹாசனே முழுப் பொறுப்பேற்று இப்படத்தை இயக்கிவருகிறார்.

சபாஷ் நாயுடு படத்தின் 80% படப்பிடிப்பு அமெரிக்காவில் படமாக்க, படக்குழு திட்டமிட்டு, படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடந்துவருகிறது. முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் கமல்ஹாசனே இயக்கத்தையும் கவனிப்பதாக ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் “ எனது படத்தின் இயக்குநர் ராஜீவ் திடீரென உடல்நிலை மோசமானது. அவருக்கு லைம் என்ற நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இது ஐரோப்பா, வட அமெரிக்கா பகுதி மக்களுக்கு மிக அரிதாக ஏற்படும் நோய்பாதிப்பு. அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் நான் இப்படத்தை இயக்கிவருகிறேன். அவரை முழுமையாக பார்த்துக்கொள்ள 24 மணிநேரமும் படக்குழுவிலிருந்து ஒருவர் சென்று மருத்துவமனையில் அவரை கண்காணித்து வருகின்றார்” என்று கூறியுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் உருவாகி வருகிறது. படத்திற்கான இசை இளையராஜா. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துவருகிறது. “சபாஷ்நாயுடு” எப்படியும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகவேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் கூடுதல் கவனத்தில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்