யார் இந்த கபாலி? - இத்தாலி சினிமா பிரபலம் ஆர்வம்!

                                


                     பிரான்ஸில் நடந்த கேன்ஸ்பட விழாவில் கலந்து கொண்டு திரும்பி இருந்தார், 'ஆனந்தா பிக்சர்ஸ்" தயாரிப்பாளர் சுரேஷ்.  அஜித் நடித்த பில்லா உட்பட சில படங்களைத் தயாரித்த இவர், இந்தியன் ஃபிலிம் பெடரேஷனின் முன்னாள் தலைவராக இருந்திருக்கிறார். தற்போது  இந்திய சினிமா ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக உள்ள அவரிடம் பேசினோம்.

''கடந்த  15 ஆண்டுகளாக  கேன்ஸ்பட விழாவுக்குத் தொடர்ந்து சென்று வருகிறேன். இதுவரை இல்லாத  புதிய அனுபவம் இந்தமுறை எனக்கு ஏற்பட்டது.  கேன்ஸ் விழாவில் பிரெஞ்சு படங்கள், ஹாலிவுட் படங்கள் என்று   பெவிலியன்கள் தனித்தனியாக இருக்கும். அதுபோல இந்திய மொழிப் படங்களுக்கு என்று தனியாக பெவிலியன் இருந்தது. அங்கே இந்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிப் படங்களை திரையிட்டு காட்டுவார்கள்.

நாங்கள் அமர்ந்து பார்த்த இந்தியன் பெவிலியனில் திரையிட்ட படங்கள் தவிர அடுத்து புதிதாக வெளிவர இருக்கும் 30 இந்தியப் படங்களின் டீஸரை திரையிட்டனர். ஒவ்வொரு படங்களின் டீசர் வந்து கொண்டே இருக்க.. திடீரென அந்த ‘நெருப்புடா’ இசை காதைக் கிழிக்க, ரஜினியின்  'கபாலி' டீஸர்  திரையிடப்பட்டது.

அவ்வளவுதான்! அரங்கில் அமர்ந்து இருந்த அத்தனைபேரும் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தனர்.  நான் சென்றுவந்த இத்தனை ஆண்டுகளில் வேறெந்த படத்துக்கோ, டிரெய்லர்களுக்கோ இப்படி ஒரு வரவேற்பைக் கண்டது இல்லை.  எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி பிரவாகம். ரஜினிபட டீஸருக்கு எதிர்பாராத  ஒரு மகத்தான வரவேற்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்தது இல்லை.

இந்த ஆரவாரங்களையெல்லாம் கவனித்த இத்தாலிய சினிமாவைச் சேர்ந்த  ஒருவர், கபாலி குறித்தும், ரஜினி படம் குறித்து வடநாட்டு சினிமா பிரபலத்திடம்  விசாரித்தார்.  உடனே அவர், என்னை அறிமுகம் செய்தார். 

'என் பேர் மிஷெல் க்ராஷியோலா’ என்று விசிட்டிங் கார்டைக் கொடுத்த அவர், ‘நான் டீஸர்ல பார்த்த 'கபாலி' படத்தை இத்தாலியில ரிலீஸ் செய்யணும்னு ஆசைப்படறேன். அது மட்டுமில்லே இத்தாலியில நடக்கப்போற பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிட விரும்பறேன். அதுக்கு நான் யாரைப் பார்க்கணும்.. பேசணும்?' என்று என்னிடம் கேட்டார். நான் தயாரிப்பாளர் தாணுவின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தேன். அதுபோல 'கபாலி' படத்தின் ஓவர்ஸீஸ் உரிமையைப் பெற்றுள்ள சஞ்சய் வாத்வாவின்  தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தொடர்பு கொள்ளச் சொன்னேன்.  நம் தமிழ் மொழியில் உருவான 'கபாலி" படத்துக்கு கடல் கடந்து வரவேற்பு கிடைத்து இருப்பது தமிழ்  சினிமா உலகத்துக்கு பெருமையான ஒன்று" என்று நெகிழ்வோடு சொன்னார்.

- எம். குணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!