தந்தையின் இழப்பிலிருந்து இன்னும் மீளாத சந்தானம்!

முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம், “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து “இனிமே இப்படித்தான்” படத்திலும் ஹீரோவாக நடித்தார். அடுத்ததாக சந்தானத்திற்கு ரிலீஸாகவிருக்கும் படம் தான் “தில்லுக்கு துட்டு”.

சந்தானத்திற்கு திரைத்துறையில் அறிமுகம் கொடுத்த விஜய் டிவியின் பிரபலமான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் இயக்குநரான ராம்பாலா தான் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிவருகிறார். லொள்ளு சபா காலத்திலேயே இருவரும் மனஸ்தாபம் வந்து பிரிந்து, மீண்டும் இணைந்திருப்பதாலும், சந்தானம் முதன் முதலில் நடிக்கும் பேய் படம் என்பதாலும், இப்படத்தின் டீஸருக்கு கிடைத்த வரவேற்பினாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்கான இசை வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கபாலி ஜூலை 1ம் தேதி ரிலீஸாகாததால் அந்த நாளில் சந்தானம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக சந்தானத்தில் தந்தை நீலமேகம் காலமானதால் படத்திற்கான ரிலீஸ் தேதியும் இசை வெளியீடும் தள்ளிவைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

சந்தானத்தின் தந்தையான நீலமேகம் (69) உடல்நிலைக் கோளாறால் ஒன்றரை மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதியன்று காலமானார். சந்தானத்திற்கு அவரின் தந்தையின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. இவர் ஒரே மகன் என்பதால், தந்தை இவரிடம் மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார்.

காமெடியன், ஹீரோ என்று நடிப்பில் மெருகேறிக் கொண்டே வந்த சந்தானம், ரசிகனைச் சிரிக்க வைப்பதில் தேர்ந்தவர். மீண்டும் அவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி, அவர் இந்தச் சோகத்திலிருந்து மீண்டு வரவேண்டுமென்பது ரசிகர்களின் விருப்பம். ஆனால் அடுத்த கட்டம் பற்றியான எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் சந்தானம். அடுத்த படத்திற்கான முடிவையும் தள்ளிவைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

  “தில்லுக்கு துட்டு” படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க, முதல்பிரதி என்ற அடிப்படையில் சந்தானம் தயாரித்துவருகிறார். தில்லுக்கு துட்டு ரிலீஸ் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஜூலை 1ம் தேதி சிபிராஜின் “ஜாக்சன் துரை” ரிலீஸாகும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!